Published : 21,Jul 2019 12:36 PM
“அண்ணன் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை” - மதுரையில் 7 பேர் கைது

அண்ணனை கொலை செய்ததற்காக பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரையை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கமுதியை சேர்ந்த மணிகண்டன் கடந்த 2017ஆம் ஆண்டு மனைவியுடன் மதுரையில் உள்ள அரியமங்கலத்தில் வசித்து வந்தார். அப்போது எருமைக்குளத்தை சேர்ந்த வழிவிட்டான் என்பவரும் மணிகண்டனுக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழிவிட்டானை கீரத்துறை பகுதியில் வெட்டிக்கொலை செய்தார் மணிகண்டன். இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்த மணிகண்டன் சொந்த ஊரான கமுதிக்கு சென்றுவிட்டார்.
இருப்பினும் வழிவிட்டானின் தம்பி சுந்தர், தனது அண்ணனை கொன்றவரை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பின்னர் மணிகண்டன் வசிக்கும் வீட்டை அறிந்த சுந்தர், தனது நண்பர்களுடன் கமுதி சென்றுள்ளார். அத்துடன் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த மணிகண்டனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்தக் கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் எருமைகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த சுந்தர் (18), கனி (18), வழிவிட்டான் (17), அருண் (16), பழனிகுமார் (16), முருகன் (17), லிங்கம் (17) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.