Published : 04,Jun 2019 07:54 AM
புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை செயல்படுத்த இடைக்கால தடை

புதுச்சேரி அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு முடிவுகள் எடுக்க துணை நிலை ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு அதிகாரங்களை வழங்கி இருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிடும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிராக கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் இன்று கிரண்பேடியின் மனுவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவும் விடுமுறைக்கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர், வரும் 7-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை எனவே விடுமுறைக்கால சிறப்பு அமர்வு எந்த இடைக்கால தடையும் விதிக்கக்கூடாது என எதிர்மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிமன்றம் வழக்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.