
அமமுகவிற்கு ஆதரவு பெருகிகொண்டிருப்பதால் கோபம் காரணமாக எனது அறையில் சோதனை செய்துள்ளனர் என அக்கட்சியின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்தார். அங்கு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம், பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விடுதிக்கு சென்ற அதிகாரிகள், தங்க தமிழ்ச்செல்வன் அங்கு இல்லாததால் மாற்றுச் சாவி வாங்கி அறையை சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில் அறையில் இருந்து பணம், ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அமமுகவின் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “மதுரையில் நான் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியது தவறில்லை. அதேபோல் ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த அறைகளிலும் பறக்கும்படை சோதனை நடத்த வேண்டும். அமமுகவிற்கு ஆதரவு பெருகிகொண்டிருப்பதால் கோபம் காரணமாக எனது அறையில் சோதனை செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஸ்டாலின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த தங்க தமிழ்செல்வன், “ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறார். ஒரு தலைவர் நிலைப்பாட்டை மாற்றி பேசுவது தவறு” எனக் குறிப்பிட்டார்.