Published : 13,May 2019 05:40 AM
வாட்டர் டேங்கிலிருந்து தண்ணீர் திருட்டு: காவல்நிலையத்தில் புகாரளித்த நபர்

வாட்டர் டேங்கிலிருந்து தண்ணீரை மர்ம நபர்கள் திருடிவிட்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நபர் ஒருவர் காவல்நிலையம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் குடிதண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிராவிலும் நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிடைக்கின்ற கொஞ்ச நீரையும் மக்கள் பொன்போல் பாதுகாத்து வருகின்றனர். குடியிருப்பு வாசிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் லாரி வருவதால் தண்ணீர் திருட்டு புகார் நிறைய இடங்களில் உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் வீட்டில் உள்ள வாட்டர் டேங்கை பூட்டு போட்டு பூட்டி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாட்டர் டேங்கிலிருந்து தண்ணீரை மர்ம நபர்கள் திருடிவிட்டதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நபர் ஒருவர் காவல்நிலையம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சரவஸ்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விலாஸ். இவர் தனது வீட்டில் உள்ள மாடியில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் ஒன்றை வைத்திருந்தார். அதில் இருந்து 250 லிட்டர் நீரை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக கூறி காவல்நிலையம் சென்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் போலீசாரை விலாஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வித்தியாசமான புகாரால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். இதனையடுத்து, தண்ணீர் திருட்டை தடுக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என விலாஸிடம் போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து அவர் காவல்நிலையத்தை விட்டு திரும்பிச் சென்றார்.