Published : 02,May 2019 10:42 AM
தாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்

தாய்லாந்தில் இன்னும் இரண்டு நாட்களில் புதிய மன்னராக முடிசூட்டப்படவுள்ள வஜ்ரலங்கோன், தனது பாதுகாப்பு அதிகாரியான சுதிடா என்பவரை மணமுடித்து அந்நாட்டின் புதிய பட்டத்து அரசியாக அவரை அறிவித்திருக்கிறார்.
தாய்லாந்தில் 70 ஆண்டுகளாக ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த 2016ஆம் ஆண்டு காலமானார். இதனை அடுத்து அவரது மகன் மகா வஜ்ரலங்கோன் வரும் 4ஆம் தேதி தாய்லாந்தின் புதிய மன்னராக முடிசூட உள்ளார். மே மாதம் 4 முதல் 6ஆம் தேதி வரை இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 40 வயது நிரம்பிய சுதிடா திட்ஜாய் என்ற பெண்ணை வஜ்ரலங்கோன் இன்று கரம் பிடித்தார்.
சட்டப்பூர்வமாக அரச முறைப்படி திருமணம் நடைபெற்றதையடுத்து, சுதிடா அந்நாட்டின் புதிய பட்டத்து அரசியாகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு சுதிடாவை தனது பாதுகாப்பு அதிகாரிகளின் துணைத் தலைவராக நியமித்தார். அவர்கள் இருவரும் அரண்மையில் தனிப்பட்ட உறவு கொண்டு வாழ்ந்து வந்ததாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர்.