Published : 15,Apr 2019 11:07 AM
குறுகிய காலத்தில்‘வேர்ல்ட் கப்’பில் இடம்பிடித்த விஜய் சங்கர் - வாய்ப்புக்கு காரணம்?

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளது குறித்து தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. மே 30ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள், ஜூலை 14ம் தேதி வரை சுமார் ஒன்றரை மாதம் நடைபெறவுள்ளன. உலகக் கோப்பை நெருங்கி விட்ட நிலையில், அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து பலநாட்களாகே பேச்சு அடிபட்டு வந்தது. எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பட்டியலை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தற்காலிகப் பட்டியலே. மே 23ம் தேதிக்குள் இந்தப் பட்டியல் உள்ள பெயர்களை ஐசிசியின் அனுமதியில்லாமல் பிசிசிஐ மாற்ற முடியும்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 10 ஒருநாள் போட்டிகளில் கூட விளையாடாத விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் 9 போட்டிகளில் விளையாடி 165 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடுவிற்கு இடம் கிடைக்கவில்லை. அணி அறிவிப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் வீரர்கள் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார்.
“ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் தன்மையை கணக்கில் கொண்டு இந்தத் தேர்வு நடைபெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு நான்காவது இடத்திற்கு நிறைய வீரர்களை முயற்சித்து பார்த்தோம். அம்பத்தி ராயுடுவிற்கு சில வாய்ப்புகளை வழங்கினோம். கே.எல்.ராகுலை முன் வரிசையில் களமிறக்க வாய்ப்புள்ளது. கலீல் அகமது பெயரும் தேர்வுக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது” என்று எம்.எஸ்.கே.பிரசாத் கூறினார்.
அதேபோல், விஜய் சங்கர் தேர்வு குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், “நான்காவது இடத்திற்கு விஜய்சங்கர் பெயர் ஆலோசிக்கப்பட்டது. விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டார்” என்று தெரிவித்தார்.
இரண்டாவது விக்கெட் கீப்பருக்குதான் இந்திய அணியில் கடும் போட்டி நிலவியது. கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இதில், கே.எல்.ராகுல் அதிகபட்சம் பேட்ஸ்மேன் ஆகவே அறியப்படுகிறார். அதனால், ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே இரண்டாவது விக்கெட் கீப்பருக்கு சற்றே போட்டி நிலவியது. இந்நிலையில்தான், பண்ட்டிற்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து அவர் கூறுகையில், “நெருக்கடி உள்ள போட்டிகளில், ஆட்டத்தை வெற்றிகரமாக தினேஷ் கார்த்திக் முடிப்பதை பார்த்து வருகிறோம். அதனால்தான் அவரைத் தேர்வு செய்தோம். மேலும், இரண்டாவது விக்கெட் கீப்பரான அவர் தோனிக்கு காயம் ஏற்படும் போது அந்தப் பணியை மேற்கொள்வார்” என்றார்.