Published : 25,Apr 2017 12:56 PM
போராட்டம் வெற்றி: மு.க.ஸ்டாலின் பேட்டி

விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. ஆட்டோக்கள் இயங்கவில்லை.
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரை போலீசார் கைது செய்தனர். சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. அமைதி வழியில் நடைபெற்ற இப்போராட்டம் வெற்றி பெற துணைநின்ற அனைவருக்கும் நன்றி. அகில இந்திய அளவில் போராட்டம் எதிரொலித்துள்ளது. எனவே இனிமேலாவது விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போராட்டத்தை தடுத்து நிறுத்த காவல்துறை சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது தங்களுக்கு தெரியும் எனவும் அவர் கூறினார்.