Published : 28,Mar 2019 03:36 AM
பிராமண சமூக பதாகை விவகாரம்: ட்விட்டர் சிஇஓ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பிரமாண சமூகத்தினருக்கு எதிரான பதாகையை ட்விட் செய்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளிக்க ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது, அவரை சில பெண் செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களுடன் பட்டியலின சமூகச் செயற்பாட்டாளர் ஒருவரும் இருந்தார். அவர் ஜாக் டோர்சேவுக்கு ஒரு பதாகையை வழங்கினார். அதில், பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம் (smash Brahminical patriarchy) என எழுதப்பட்டிருந்தது.
(அந்த பதாகை...)
பின்னர் அந்தப் புகைப்படத்தை அந்தச் சமூகச் செயற்பாட்டாளர், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அது கடும் சர்ச்சையானது. ஜாக் டோர்சேவின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த பதாகையை வடிவமைத்தவர் அமெரிக்காவை சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜன் என்ற பட்டியலின செயற்பாட்டாளர்.
இந்நிலையில், விப்ரா பவுண்டேசன் என்ற அமைப்பைச் சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில், ஜாக் டோர்சேவுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் வழக்குத் தொடர்ந்தார். ’அதில் இந்த ட்விட் மூலம் டோர்சே, பிராமண சமூகத்தைக் காயப்படுத்திவிட்டார்’ என்று கூறியிருந்தர். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டதை அடுத்து வழக்குப் பதிவு செய்யப் பட் டது. இதற்கிடையே அந்த ட்விட் பற்றி விளக்கம் அளித்த அந்த நிறுவனம், பின்னர் மன்னிப்புக் கேட்டுவிட்டு அதை நீக்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் கார்க், ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் இதற்கு ஜாக் டோர்சே பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.