Published : 11,Mar 2019 04:43 AM

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எத்தனை நாள் பரப்புரை செய்யலாம் ?

TN-Political-Parties-can-campaign-only-19-days

தமிழகத்தில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு வெறும் 19 நாட்களே உள்ளன.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்று தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தற்போது நடைபெறவில்லை. தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அரசாங்கத்தின் புதிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகாது.

இதனிடையே தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள வெறும் 19 நாட்களே உள்ளது தெரியவந்துள்ளது. தற்போது தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டன. இனி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதேபோல தேர்தல் அறிக்கையும் அந்தந்த கட்சிகள் சார்பில் வெளியிடப்படும்.

வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை மார்ச் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினமே ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற இறுதி நிலவரம் தெரியவரும். எனவே அதன் பின்தான் தேர்தல் பரப்புரையே சூடுபிடிக்கும்.

வேட்பாளர்களை முன்நிறுத்தி அந்தந்த தொகுதிகளில் கட்சியின் தலைவர்கள் பரப்புரை மேற்கொள்வார்கள். அதேசமயம் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் என்பதால், அதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக ஏப்ரல் 16-ஆம் தேதியே தேர்தல் பரப்புரை ஓய்ந்துவிடும். அப்படிப் பார்த்தால் மொத்தமாக 19 நாட்கள் தான் தீவிர பரப்புரையில் அரசியல் கட்சிகள் ஈடுபட முடியும் என்பது தெரியவந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்