Published : 02,Feb 2019 10:14 AM
“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் ஹீரோ” - சந்தானம்

திரைப்படத்தை தயாரிப்பது மிகவும் கடினம் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். இவரது ரைமிங் வசனம் மற்றும் டைமிங் பஞ்ச் போன்றவை இளம் சினிமா ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது. தொலைக்காட்சி நடிகராக இருந்த சந்தானத்திற்கு வெள்ளித்திரை அள்ளிக் கொடுத்தது அதிகம். ஆனால் சில ஆண்டுகளாகவே அவர் காமெடி ரோலில் நடிப்பத்தை தவிர்த்துவிட்டார். அவரது கவனம் ஹீரோ பக்கம் தாவியது.
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது உருவாக்கியுள்ளனர். இந்தத் திரைப்படத்தை சந்தானமே தயாரித்து நடித்து இருக்கிறார்.
‘தில்லுக்குதுட்டு2’ திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் தயாரிப்பாளரான நடிகர் சந்தானம் செய்தியாளர்களைச் சந்தித்தார். திரைப்பட தயாரிப்பு பற்றி பேசுகையில், நடிப்பதைவிட ஒரு திரைப்படத்தை தயாரிப்பது மிகவும் கடினம் என்று அவர் கூறினார்.
அதேபோல தயாரித்து படத்தை வெளியிடுவது அதைவிடச் சிரமமாக உள்ளது என்றும் கூறினார். மேலும் தனக்கு திரைப்படம் இயக்கும் எண்ணம் இருப்பதாகவும், அவ்வாறு இயக்கினால் அதில் ஆர்யா ஹீரோவாக நடிப்பார் என்றும் சந்தானம் தெரிவித்தார்.