Published : 23,Jan 2019 04:48 PM

“தேச துரோகி பட்டத்தை மரியாதையுடன் ஏற்போம்” - ஸ்டாலின்

stalin-speech-in-trichy-about-modi-government

பாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகி என்றால் அந்தப் பட்டத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் என்ற மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாஜகவை எதிர்ப்பவர்கள் தேச துரோகி என்றால் அந்தப் பட்டத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் ரஃபேல் ஒப்பந்த பேரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என ஆதாரத்துடன் பாஜக அரசு நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் தவறு என்று கூறவில்லை எனவும் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூக நீதியை சீர்குலைக்கும் எனவும் தெரிவித்தார்.

சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதுதான் மோடியின் மனுநீதி எனவும் ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடி செய்யக்கூடிய வேலையா இது எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அம்பேத்கரை அவமானப்படுத்தும் செயல் எனவும் அநீதி ஆட்சிக்கு உதாரணமாக மோடி அரசு உள்ளது எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 

பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து வந்தாலும் தனித்தனியாக வந்தாலும் அவர்களை திமுக வீழ்த்தும் எனவும் தேசத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களால் ஆபத்து வந்துள்ளதால் தேசம் காப்போம் மாநாடு நடத்தப்படுவதாகவும் எடுத்துரைத்தார்.

அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும் எனவும் தேசத்தை காக்கவே பாஜகவை எதிர்த்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட ஸ்டாலின், நாட்டில் மிகவும் மலிவான ரப்பர் ஸ்டாம்ப் என்னவென்றால் தேச துரோகி என்ற முத்திரைதான் என தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்