Published : 16,Jan 2019 05:15 AM
தலிபான் தீவிரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவரும் மரணமடைந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையே தீவிரவாத தாக்குதலுக்கு தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய அரசு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மீது ஆப்கானிஸ்தான் அரசு துரித நடவடிக்கை எடுக்கவும் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.