Published : 14,Apr 2017 01:29 PM
வருமான வரித்துறை புகார்: 3 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு

வருமான வரித்துறை அளித்த புகாரின்பேரில் 3 அமைச்சர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியை மிரட்டியாதாகவும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி ஓரிரு தினங்களுக்கு முன் காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஆணையரிடம் வருமான வரித்துறை புலணாய்வு அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆதாரங்கள் அழிப்பு உள்ளிட்ட 183,186, 189, 448 பிரிவுகளின் கீழ், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷணன், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் மீதும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் மீதும் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.