Published : 11,Dec 2018 02:39 AM
தேர்தல் முடிவு: திரிபுர சுந்தரி கோயிலில் ராஜஸ்தான் முதல்வர் சாமி தரிசனம்!

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, பன்ஸ்வாராவில் உள்ள திரிபுர சுந்தரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற தகவல்கள் பிற்பகலுக்குள் தெரியவரும். வாக்கு எண்ணிக்கைகாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 4-வது முறையாகவும் சத்தீஸ்கரில் தொடர்ந்து 3-வது முறையாகவும் ஆட்சியமைக்கும் முனைப்பில் ஆளும் பாரதிய ஜனதா உள்ளது. எனினும் இவ்விரு மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் தொடர்ச்சியான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொருத்தவரை கடந்த கால் நூற்றாண்டாக மாறிமாறி பாரதிய ஜனதாவும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இம்முறை பாரதிய ஜனதாவிடமிருந்து ஆட்சியை பறிக்க காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டுள்ளது.
தெலங்கானாவை பொருத்தவரை இதுதான் முதல் தேர்தல். ஆளும் டிஆர்எஸ் கட்சியை வீழ்த்த தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 5 மாநிலங்களிலும் மொத்தம் 83 மக்களவை தொகுதிகள் உள்ளன. ன்றைய தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவு வெளிவரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பன்ஸ்வாராவில் உள்ள புகழ்பெற்ற திரிபுர சுந்தரி கோயிலில் வழிபட்டார். தேர்தல் முடிவுகள் சாதகமாக வரவேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டதாகத் தெரிகிறது.