Published : 17,Nov 2018 12:00 PM

“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்?” - ஒரு உண்மை கடிதம்

A-comman-Man-Letter-from-Delta-Region-about-Gaja-cyclone

தமிழகத்தை கடந்த ஒரு வாரமாக அச்சுறுத்தி வந்த கஜா புயல்  நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கரையைக் கடந்தது. கஜா புயலால், நாகை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேதாரண்யத்தில் ‘கஜா’ புயல் கோரத் தாண்டவமாடியது. அதில் வேதாரண்யம் தனித் தீவாகவே மாறியது. தொலைத்தொடர்புகள் முற்றிலும் இயங்கவில்லை. இந்நிலையில் மக்கள் சிலர் தக்களது கருத்துகளை வெளியூரிலிருந்து தங்களின் சொந்த ஊரிலுள்ள நிலையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் வேதாரண்யம் பகுதியை சார்ந்த தாஸ் என்பவரின் பதிவு தான் இது.

ஊர் கூடினால் தானே தேர் நகரும். தென் கோடி மக்களுக்காக இந்த ஊர் கூடவே இல்லை !

சென்னையின் வர்தா, சென்னையில் வெள்ளம் என்ற போதெல்லாம் தமிழ்நாடே களங்கியது. லாரி லாரியாக பொருட்களும் ஆட்களும் தமிழகத்தின் மூளை முடுக்கிலிருந்து சென்னையை நோக்கி படையெடுத்தன. நாகையில் இருந்து லாரியில் படகுகள் கொண்டு வரப்பட்டன. சென்னையை மீட்கக்கூறி சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக்குகள் பறந்தன. மீம்ஸ்கள் பறந்தன. தமிழகம் கைகோர்த்து நின்றதை உலகமே கண்டு வியந்தது. இதே வேகம், கேரள வெள்ளத்தில் எதிரொளித்தது. லாரி லாரியாய் பொருட்கள் கேரளா சென்றன. கேரளாவில் இருந்து நன்றி கூறிய நெகிழ்ச்சி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தின் கெத்தை எதிரொளித்தது. அரசியல் வாதிகள், நடிகர், நடிகைகள் என செலிபிரிட்டி வகையறாக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைநிமிர்ந்தன.

நிற்க.

தமிழகத்தின் வரைபடத்தை நேராக வைத்தால் ஒரு மூக்கு போல இருக்கும். அது வேதாரண்யம். வேதாரண்யத்துக்கு அந்தப்பக்கம் கடல். அருகே ஒரு காடு, அது கோடியக்கரை. மான், முயல், குதிரை, வெளிநாட்டு பறவைகள் என ஒரு சரணாலயம் அது. 'அன் சங் ஹீரோ' என்பார்களே அந்த வகை. ஓரத்தில் சிக்கி விட்டதால் உலகால் கண்டுகொள்ளப்படாத சரணாலயம். டெல்டா என்றால் தொழிற்சாலை சார்ந்த தொழில் கிடையாது. மண்ணு, மரம், ஆடு, மாடு, செடி, கொடி, கடலு, மீனு, உப்பு இவற்றுக்குள் அடங்கிவிடும் அவர்கள் வாழ்வு.

 

இயற்கைதான் அங்க சாமி. மழை பெய்தா பயிர் உண்டு. இல்லாவிடில் நஷ்டம். காவிரில் தண்ணீர் வந்தால் விவசாயம். இல்லாவிடில் நட்டம். இதனை வைத்து வாழ்க்கையை பெரியதாய் ஓட்டிவிட முடியாது என்பதே காலவழக்கம். அதற்காக அங்கு உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு ஓட தொடங்கினார். வீட்டிற்கு ஒரு இளைஞர் சிங்கப்பூரில் இருப்பான். எந்த நாடு வேண்டுமானாலும் சென்று டெல்டாகாரன் அந்தப்பக்கம் வாடா என்றால் நாலு பேரு வந்து நிப்பான். மிச்ச சொச்சம் சிலர் சென்னை, கோவை என திரிந்துகொண்டு இருப்பர்.

 

இப்படி ஒரு வாழ்க்கை முறையை கொண்டுள்ள ஊர்தான் இன்று சீரழிந்து கிடக்கிறது. வேதாரண்யம் மட்டுமல்ல டெல்டாவே சீரழிந்து கிடக்கிறது. மாதம் மாதம் தேங்காய் பறித்தால்தான் குடும்பம் ஓடும் என்ற நிலையில் உள்ளவர்களின் தென்னை மரங்கள் எதுவும் இன்று இல்லை. எல்லாம் பல தலைமுறைகளை தாண்டிய தென்னை மரங்கள். மீண்டும் மரம் நட்டு, வளர்த்து காய்க்கத் தொடங்கி அது வியபாரம் ஆகும் போது பலருக்கு வயது தளர்ந்திருக்கும். அதுவரை எப்படி குடும்பத்தை ஓட்டுவது என்றால்? அதற்கு இப்போதைக்குப் பதில் இல்லை.

சென்னை வெள்ளத்தின்போது நாம் பார்த்த வாஞ்சையும், நம் மக்கள் என்ற இரக்கமும், உதவும் மனப்பான்மையும் இன்று உள்ளதா என்று பலர் தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்கின்ற நேரம் இது. அங்கங்கே சிலர் உதவிக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் ஊர் கூடினால் தானே தேர் நகரும். தென்கோடி மக்களுக்காக இந்த ஊர் கூடவே இல்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. வழக்கம் போல் சென்னை இயங்கி கொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் டெல்டாவாசிகள் மற்றும் சில உதவும் உள்ளங்கள்தான் கதறிக்கொண்டு இருக்கிறார்கள். 

கஜாவை கலாய்த்து போட்ட மீம்களின் கால்வாசியைக்கூட கஜாவின் பாதிப்புக்காக போடவில்லை. வழக்கம் போல் யாரோ ஒரு பெண்ணை இந்த வாரத்துக்கான அழகியாய் தேர்வு செய்து ட்ரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே வீழ்ந்துகிடப்பது நமது மக்கள். அவர்கள் வாய்விட்டு கதறிக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நமக்குத்தான் இங்கு கேட்கவே இல்லை. கஷ்டம் என்றால் வந்து நிற்போம், இதுதான் தமிழ் மக்கள் என்ற பிம்பம் இருக்கிறதே, அதை அப்படி நிலைநாட்டி விடுவோம். எல்லையைக்கூட பார்க்காமல் கேரளாவிற்காக நின்ற நாம் இன்று நம் எல்லை சிதைந்து கிடக்கும் போது காணாமல் போவது தகுமா?

இப்படிக்கு 
சென்னையில் வசிக்கும்
டெல்டாகாரன் தாஸ்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்