[X] Close

சமரச முயற்சி தோல்வி: ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது அர்ஜுன் வழக்கு!

Actor-Arjun-s-Rs-5-crore-defamation-case-against-Sruthi-Hariharan

பாலியல் புகார் கூறிய விவகாரத்தில் கன்னட திரைப்பட வர்த்தக சபை நடத்திய சமரசப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நடிகை ஸ்ருதிஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

நாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் ’மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல புகார்கள் வெளிவந்து அதிர்ச்சி அளித்து வருகிறது.

நடிகை, தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கங்கனா ரனவத், குயின் இயக்குனர் மீது பாலியல் புகார் சொல்ல, இது தொடர்பான புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலரும் அவர் மீது புகார் கூறினர்.


Advertisement

ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, நடிகை அமலா பால் ஆகியோர் இயக்குனர் சுசி கணேசன் மீது குற்றஞ்சாட்டினர். இதற்கு மறுப்புத் தெரிவித்த அவர், லீனா மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்நிலையில், தமிழில், ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ’நிலா’, ’நிபுணன்’ படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது அத்துமீறி நடந்து கொண்டதாக, மீ டூவில் கூறியுள்ளார்.

ஸ்ருதி ஹரிஹரன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தில், ’2016 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுனுடன் இருமொழியில் தயாரான படமொன்றில் (நிபுணன்) நடித்துக் கொண்டிருந்தேன். அவர் படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது மகிழ்ச்சி அடைந்தேன். எங்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சி படமாக்கப்பட்டது. இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது ஒத்திகை யின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல் லாமல், கட்டிப் பிடித்தவாறு என் முதுகில் கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.


உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா எனக் கேட்டேன். பதில் இல்லை. நடப்பதை நினைத்து திகிலுற்றேன். சினிமாவின் இது யதார்த்தம் என்பதை உணர்ந்தேன். இது தவறு என்பதையும் உணர்ந்தேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கோபமாகதான் இருந்தது. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை. மேக் அப் அறை டீமில் மட்டும் சொன்னேன். படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது’ என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதை நடிகர் அர்ஜுன் மறுத்திருந்தார்.

இதனிடையே ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க சிலர், ஸ்ருதி ஹரிஹரன் விளம்பர நோக்கில் பொய் புகார் கூறுவதாக தெரிவித்தனர். ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு வெளியே போராடிய சிலர், அவரை கர்நாடாக திரைப்பட வர்த்தக சபையிலிருந்து தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நடிகர் அர்ஜுனின் மாமனார் ராஜேஷ், கன்னட திரைப்பட வர்த்தக சபையில் ஸ்ருதி மீது புகார் செய்தார். இந்த விவகாரம் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடாக திரைப்பட வர்த்தக சபை இதுகுறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஸ்ருதி ஹரிஹரன்- அர்ஜுன் ஆகியோருக்கு இடையே சந்திப்பை உருவாக்கி அதன்மூலம் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது. அதன்படி இதற்காக சமரசக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. 

நடிகர் சங்க தலைவர் அம்பரீஷ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் சென்னேகவுடா, தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், முனிரத்னா உள்பட நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். நடிகர் அர்ஜுனும் பங்கேற்றார். அவரிடமும் அர்ஜுனிடமும் தனித்தனியாக அம்பரீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். தனக்கு நடந்த பாலியல் தொல்லையை ஸ்ருதி தெரிவித்தார். அர்ஜுன் அதை மறுத்தார். இதையடுத்து இருவரும் சமரசத் தீர்வை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து பேசிய அம்பரீஷ், ‘சமரசத் தீர்வை ஏற்க இருவருமே மறுத்துவிட்டனர். இது தொடர்பாக நேரம் எடுத்துக்கொண்டு வந்து சொல்லு ங்கள் என்று கூறியிருக்கிறோம். பல பிரச்னைகள் இங்கு தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதற்கிடையே, ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகர் அர்ஜுன். அதோடு அவரது  மானேஜர் ஷிவ் அர்ஜுன், சைபர் கிரைம் போலீசில் நடிகை ஸ்ருதி மீது புகார் செய்துள்ளார்.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close