Published : 24,Sep 2018 12:59 PM

ரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் !

11-years-on--Team-India-members-cherish-2007-World-T20-memories-on-Twitter

இந்திய ரசிகர்களை மறக்க முடியாத மகிழ்ச்சியில் ஆழ்த்திய தினம் இன்று. 2007 இல் முதன்முதலாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்று மகுடம் சூட்டியது. மகேந்திர சிங் தோனி தலைமயிலான இளம் படை உலகக் கோப்பையை
வெல்லும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், சச்சின், டிராவிட், கங்குலி என மூத்த வீரர்கள் யாருமே அப்போதைய
இந்திய அணியில் இடம்பெறவில்லை. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்
கோப்பை வென்றது. அதன் பிறகு, 2003ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி புயலாக விளையாடிய போதும், இறுதிப் போட்டியில்
ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. பல ஆண்டுகளாக கனவாகவே இருந்த உலகக் கோப்பை இந்தியாவுக்கு டி20
போட்டியின் மூலம் கிடைத்தது. 

          

இந்திய அணி தனது முதல் டி20 போட்டியில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2016 டிசம்பரில் தான் விளையாடியது. டி20 உலகக் கோப்பை
2007 செப்டம்பரில் தொடங்கும் வரை இந்திய அணி சொற்பமான போட்டிகளில் தான் விளையாடியது. அனுபவமே இல்லாமல் இந்திய
அணி களமிறங்கியது. இளம் வீரர்களின் நம்பிக்கையுடன் தோனியின் இளம் படை களமிறங்கியது. 

இந்திய அணிக்கு ஒவ்வொரு போட்டியும் ஸ்வாரஸ்யமானதாக அமைந்தது. எல்லா போட்டியுமே ரசிகர்களை இருக்கையின் நுனியில்
அமர வைக்கும் அளவிற்கு த்ரில் நிறைந்ததாக இருந்தது. இந்திய அணிக்கு முதல் போட்டியே அதிர்ச்சியாக அமைந்தது. எளிதில்
வெல்லக் கூடிய ஆப்கான் உடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இரண்டாவது போட்டியில்தான் திக்..திக்..திக். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்பாக தான் இருக்கும். ஆனால், அந்த பரபரப்பையும் தாண்டி போட்டி வேற லெவலில் இருந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 141 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய பாகிஸ்தானும் அதே ரன்களை எடுத்தது. இதனால் போட்டி டை ஆனது. பாகிஸ்தான் வசம் இருந்த போட்டியை டை ஆக்க தோனி பட்ட பாடு இருக்கே. கடைசி பந்தில் ரன் அவுட் செய்து டிரா ஆக்கினார். எப்படியோ "பவுல் அவுட்" முறையில் இந்திய அணி அந்தப் போட்டியை வென்றது.

      

நியூசிலாந்து உடனான மூன்றாவது போட்டியில் இந்திய அணி போராடி தோற்க நெருக்கடி ஏற்பட்டது. அந்த நிலையில் இருந்து
பார்த்தால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அதன்பிறகு தான் வேகம் எடுத்தது இந்திய
அணியின் விஸ்வரூபம். வரிசையாக இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் வென்று
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தான் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்ஸர் விளாசினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா உடனான அரையிறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் அதிரடியால் எளிதில் வென்றது.

         

இறுதியாக பாகிஸ்தான் உடன் இதே நாளில் நடந்த இறுதிப் போட்டியில் தான் அனல் பறந்தது. முதல் டி20 உலகக் கோப்பையை
வெல்வது யார் என இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த அந்தப் போட்டியில் முதலில்
விளையாடிய இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ், தோனி அந்தப் போட்டியில் சொதப்பினர். காம்பீர்
75 ரன்களும், ரோகித் கடைசி நேரத்தில் 16 பந்தில் 30 ரன்களும் எடுத்தனர்.  158 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பாகிஸ்தான்
வீரர்கள் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 77 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட் வீழ்ந்துவிட்டது. 16
ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 104 ரன்கள் எடுத்திருந்தது. 24 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 

         

17வது ஓவரை ஹர்பஜன் வீசினார். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் மிஸ்பா உல் ஹாக். இந்திய ரசிகர்களின்
இதயமே நொறுங்கிவிட்டது. சும்மா நடக்கிற போட்டியிலேயே ரசிகர்கள் கொஞ்சம் பீல் ஆவார்கள். ஆனால் இது உலகக் கோப்பை,
அதுவும் பாகிஸ்தான் உடனான போட்டி. ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். ஹர்பஜனே கலங்கிவிட்டார். அடுத்த ஓவரை ஸ்ரீசாந்த் வீச முதல்
பந்திலே சிக்ஸர். என்னடா இது சோதனை அப்படினு நினைப்பதற்குள் 5வது பந்தில் மற்றொரு சிக்ஸர் விளாசினார் தன்வீர். அப்போது
இருந்த நிலை, 13 பந்தில் வெறும் 20 ரன்கள் மட்டுமே. மூன்று விக்கெட்கள் கைகளில் பாகிஸ்தான் வசம் இருக்கிறது. இந்த நிலையில்
யாரை கேட்டாலும் சொல்வார்கள் பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று. அந்த ஓவரில் ஆறுதலாக தன்வீரை ஆட்டமிழக்க செய்தார்
ஸ்ரீசாந்த். 

           

19வது ஓவர் தான் இந்திய அணிக்கு சற்று திருப்பு முனையாக இருந்தது. அந்த ஓவரை ஆர்.பி.சிங் வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன்களே
விட்டுக் கொடுத்த அவர், 5வது பந்தில் உமர் குல்லை அவுட் ஆக்கினார். அப்போது 7 பந்தில், 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த
நிலையில், கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் முகமது ஆசிஃப். அட போங்கப்பா என்று ஆகிவிட்டது. கடைசி ஓவரில் 13 ரன்கள். ஒரு
விக்கெட் கைவசம். திக்..திக்..திக் என இருநாட்டு ரசிகர்களுக்கும் இருந்தது.

         

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஜோகிந்தர் சர்மாவை பந்துவீச அழைத்தார் தோனி. தோனியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. அதற்கேற்ப முதல் பந்தையே ஓயிடாக வீசினார். அதோடு, இரண்டாவது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார் மிஸ்பா. 4 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்த நேரத்தில் மிஸ்பா அடித்த அந்த ஸ்கூப் ஷாட் போட்டியையே மாற்றிவிட்டது. மிஸ்பா அடித்த பந்தை ஸ்கொயர் லெக்கில் இருந்த ஸ்ரீசாந்த் அழகாக பிடிக்க, அப்பொழுதுதான் இந்திய ரசிகர்களுக்கு உயிர் வந்திருக்கும். என்னா போட்டிடா இது என்று ஆகிவிட்டது. முதல் உலகக் கோப்பை இந்திய அணி வசம் வந்துசேர்ந்தது. 

             

அந்த தொடரில் இந்திய அணி ஒருவரை மட்டுமே நம்பி இருக்கவில்லை. யுவராஜ், காம்பீர், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஆர்.பி.சிங்  
என ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையில் கோப்பை வெல்ல உதவினார்கள். இந்திய அணி கோப்பை வென்று 11 ஆண்டுகள்
ஓடிவிட்டது.

         

தோனி என்ற வீரரை உலகம் அறிய செய்ததே அந்த உலகக் கோப்பை வெற்றி தான். தோனி தனது வெற்றி வரலாற்றை
அங்கிருந்து தான் தொடங்கினார். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்