Published : 29,Aug 2018 07:01 AM

ஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா ?

National-Sports-Day--Remembering-the-hockey-wizard-Major-Dhyan-Chand

இந்தியா பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட சாதனையாளர்களை ஆண்டான்டு காலமாக உருவாக்கி வருகிறது. ஆனால், காலத்தால் மறக்க முடியாத ஒரு வீரர் உண்டு என்றால் அது தயான் சந்த் மட்டுமே. இந்தியர்களுக்கே தயான் சந்த் என்பவர் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், நம் அனைவருக்கும் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரியும். ஆனால் ஹாக்கியை விட நமக்கு கிரிக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாக பார்க்கிறோம். அதனால்தான் என்னவோ தயான் சந்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது. அந்த ஹாக்கி விளையாட்டுக்கு பிதாமகன் ஒருவர் இருந்தார் மறைந்தார் அவர்தான் மேஜர் தயான் சந்த். அப்படிப்பட்ட ஒரு வீரரை "மேஜிக் மேன்" என உலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

ஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு ஒரு மாயாஜால காட்சியை போலவே தோன்றும். 

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29- ஆம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த். 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் ஹாக்கி விளையாட்டின் மீது தயான் சந்துக்கு ஆர்வம் ஏற்பட்டது. காலையில் ராணுவம் பணி இரவில் விளக்குகள் இல்லாத மைதானத்தில் நிலவின் ஒளியில் பயிற்சி என தயான் சந்த் தனது ஹாக்கி விளையாட்டில் ஈடுபட்டார். 

1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கையின் தொடக்க போட்டி. அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 இல் வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர்வுப் பெற்றார் தயான் சந்த்.

ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த். முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு  ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. 1928- இல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.

இதனையடுத்து நெதர்லாந்துக்கு எதிரான ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் தயான் சந்தால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்தியா வெற்றிப்பெற்று முதல் முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அந்த ஒலிம்பிக்கில் தயான் சந்த் அடித்தது மொத்தம் 14 கோல்கள். இதனையடுத்து 1932- இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.

1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார். ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956- ஆம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார்  என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது. இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த் இறுதிக் காலம் கொடுமையாகவே இருந்தது.வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.

ஹாக்கியின் பிதாமகனான தயான் சந்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்