Published : 25,Mar 2017 08:15 AM

தமிழக நலன்களை காவு கொடுக்கும் அரசு: மு.க.ஸ்டாலின்

MK-Stalin-alleged-TN-government

பினாமி அதிமுக அரசு தமிழகத்தின் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட்” தேர்வை எழுதும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், சட்மன்றத்தில் கண் துடைப்புக்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டு, அந்த சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

வறட்சி நிவாரணப் பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வந்த போது, அதற்கான முழு ஆதாரத்தையும் வழங்காமலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டியலைக் கூட கொடுக்காமல் கோட்டை விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக இன்றைக்கு வெறும் 2014 கோடி ரூபாயை மட்டும் வறட்சி மற்றும் புயல் நிவாரண நிதிகளாக பெற்றுவிட்டு, வீண் தம்பட்டம் அடித்துக் கொண்டு விளம்பரம் தேடுவதில் தீவிரமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்து விசாரிக்க, மேலும் இரண்டு ஆண்டு காலம் காலக்கெடுவை ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் மூன்றாவது முறையாக நீட்டித்துக் கொடுத்துள்ள நிலையில், அது பற்றி வாய் திறக்காமலும், மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் அச்சடித்த பதுமையாக அசையாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நலன்களை பாதிக்கும் நீட் தேர்வு, வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு, மீத்தேன் திட்டம் போன்றவற்றில் மத்திய அரசும் துளியும் கவலைப்படாமல் செயல்படுவது வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மீறும் வகையில் இலங்கை இனப்படுகொலை பற்றிய சுதந்திரமான விசாரணைக்கான காலக்கெடுவையும் இப்போது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதை மத்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையில் அமைதியாக வேடிக்கை பார்த்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்