Published : 03,May 2018 10:03 AM
சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை - திவாகரன்

சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அப்போலோவில் பார்க்கவில்லை என்று திவாகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா சகோதரர் திவாகரன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரத்துக்கும் மேலாக திவாகரனிடம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் திவாகரன் பேசுகையில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து என்னிடம் கேட்டார்கள், நான் விளக்கம் அளித்துள்ளேன். ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்து விட்டதாக தகவல் வந்தது. அதைதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் கூறினேன். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை. அப்போலோவிற்கு 2 முறை சென்றும் ஜெயலலிதாவை உயிருடன் பார்க்க முடியவில்லை; இறந்தபின்பே பார்த்தேன்” என்று கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து இருவேறு கருத்துக்களை திவாகரன் சொல்லியிருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.