Published : 20,Apr 2018 07:08 AM

சூரப்பாவிற்கு எதிராக களமிறங்கிய விஜயகாந்த்: தேமுதிக- போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

Vijayakanth-rally-against-Anna-University-vice-chancellor-vijayakanth

சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையிலான பேரணியில் தேமுதிகவினர் மற்றும் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பெங்களூருவைச் சேர்ந்த ஐஐஎஸ்சி முன்னாள் பேராசிரியர் சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 5-ம் தேதி நியமனம் செய்து உத்தரவிட்டார்.  இதனிடையே அண்ணா பல்லைக்கழக துணைவேந்தராக வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கல்வியாளர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவியது. அரசு தரப்பிலோ, துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநர் சம்பந்தப்பட்டது. அதில் அரசு தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில் துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நியமனத்தில் தலையீடு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சூரப்பா நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. பனகல் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றனர். விஜயகாந்த் காரில் இருந்தபடியே ஆளுநர் மாளிகையை நோக்கி பயணம் மேற்கொண்ட நிலையில் ஏராளமான தொண்டர்கள் சுற்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடுப்புகளை அமைத்தனர். அந்த நேரத்தில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.