[X] Close

பங்களா, இன்னோவா கார் கேட்ட மாணிக் சர்க்கார் - கிளம்பிய சர்ச்சை

Former-Tripura-CM-Manik---Sarkar-asks-for-govt-bungalow-and-vehicle-as-oppn-leader

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தனக்கு அரசு பங்களா மற்றும் வாகனம் வழங்குமாறு திரிபுரா பாஜக அரசிடம், முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் வலியுறுத்தியுள்ளார். மாணிக் சர்க்கார் கார் கேட்ட விவகாரம் திரிபுரா அரசியலில் பாஜக - மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே பனிப் போராக உருவெடுத்துள்ளது. 

திரிபுரா சட்டமன்ற செயலாளர் பாம்தேவ் மஜும்தாருக்கு கடந்த வாரம் மாணிக் சர்க்கார் கடிதம் ஒன்றினை எழுதினார். எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் முதலமைச்சர் இல்லத்திற்கு அருகில் பங்களாவும், வாகனமும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். “உடல் நிலை பாதிப்பு ஏற்படும் என்பதால் அம்பாசிடர் காரை பயன்படுத்த முடியாது. இன்னோவா அல்லது ஸ்கார்ப்பியோ கார் வழங்குங்கள்” என்று தனது கடிதத்தில் மாணிக் சர்க்கார் வலியுறுத்தியுள்ளார். மாணிக் சர்க்காரின் வேண்டுகோளை அடுத்து போலீரோ ஜீப் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் சிக்கல் உருவாகியுள்ளது. மாணிக் சர்க்காருக்கு வழங்கப்பட்ட அந்த பொலீரோ கார் 5 வருடம் பழமையானது, 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. அதனால், சர்க்கார் தனக்கு வழங்கப்பட்ட அந்த காரை ஏற்கவில்லை. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக தலைவர்கள் மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பிஜன் தார் கூறுகையில், “மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் செல்ல வேண்டி இருப்பதால் பெரிய வாகனமாக சர்க்கார் கேட்டிருந்தார். அவருக்கு உடல் நலத்தில் சிக்கல் ஏற்படும் என்பதால் அம்பாசிடர் பயன்படுத்த முடியாது. பாஜக அரசு அவருக்கு உரிய  வாகனம் வழங்க முடியாது என்றால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சொந்தமான இன்னோவோ கார் அவருக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.


Advertisement

நாட்டிலே மிகவும் ஏழ்மையான முதலமைச்சர் என்று பெயர் பெயர் எடுத்தவர் மாணிக் சர்க்கார். 20 வருடங்கள் முதலமைச்சராக இருந்த அவருக்கு சொந்தமாக கார், வீடு எதுவும் கிடையாது. கையிருப்பு பணம் கூட மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த தகவல்கள் எல்லாம் அவர் தேர்தலுக்கு விண்ணப்பித்த தருணத்தில் வெளியானது. ஏழ்மையான முதலமைச்சர் என்ற அந்தப் பெயரை வைத்தே பாஜக தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளது. மாணிக் சர்க்கார் முதலாளித்துவ மனிதராக மாறிவிட்டார் என்று பாஜக விமர்சித்துள்ளது. “சர்க்காருக்கு ஒதுக்கப்பட்ட காரை அவர் நிராகரித்துவிட்டார். நாட்டின் ஏழ்மையான முதலமைச்சர் என்று அவர் அறியப்பட்டாலும், அவர் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார். இன்னோவோ கார் வேண்டுமென்று அவர் கேட்டுள்ளது அதனை உறுதி செய்கிறது. ஆடம்பர வாழ்க்கைக்காகவே அவர் குறிப்பிட்ட சொகுசு காரை கேட்கிறார்” என்று பாஜக செய்தி தொடர்பாளர் சுப்ரதா சக்ரபோர்தி கூறியுள்ளார். 

திரிபுராவில் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் அங்கு பாஜக மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே சர்ச்சைகள் வெடித்த வண்ணம்தான் உள்ளது. 25 வருடங்களாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு சீட் கூட வெற்றிப் பெறாத பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்த வெற்றி திரிபுரா அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. வெறும் ஆட்சி மாற்றமாக பார்க்காமல், சித்தாந்த ரீதியாக மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் பார்க்கிறார்கள். அதனால், வெற்றி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் லெனின் சிலை இயந்திரம் கொண்டு இடித்து தள்ளப்பட்டது. இந்திய அளவில் சிந்தாந்த ரீதியாக எதிரும் புதிருமான கட்சிகளாக இருப்பவை பாஜக-மார்க்சிஸ்ட் தான். பாஜக காங்கிரஸ் கட்சிகளிடையே உள்ள முரண்பாடுகளை விட இந்த இரு கட்சிகளிடையே கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவத்தில் இருப்பவை. 


Advertisement

             

அதனை சமீபத்திய பங்களா, வீடு ஒதுக்கீடு செய்யும் சம்பவமும் உறுதி செய்துள்ளது. முதலமைச்சர், கேபினட் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்கும் பகுதியில் அந்த வீடு உள்ளது. அந்த பகுதியின் பாதைக்கு 15 வருடங்களாக மார்க்ஸ் எங்கெல்ஸ் சரனி என்ற பெயர்தான் இருந்து வந்தது. தற்போது அந்தப் பெயர் டாக்டர்.ஷியாமா பிரசாத் முகர்ஜி என்று மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இல்லத்தில் இன்று குடியேறியுள்ளார். திரிபுராவில் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிர்வினையாக கொல்கத்தாவில் ஷியாமா பிரசாத் சிலை மீது கருப்பு மை பூசப்பட்டது என்பது இங்கு முக்கியமானது. 


Advertisement

Advertisement
[X] Close