[X] Close

மும்பையில் திகில் கிளப்பிய ’தக் தக்’ கேங் தலைவன், தமிழன்!

Dad-a-thief--sons-are-engineer-and-doctor

தேங்காய் உடைத்து, பூஜை செய்து பயபக்தியுடன் திருட்டு: கும்பல் கைது!மும்பை உட்பட வட இந்தியாவில் திகில் கிளப்பிய ’தக் தக்’ கேங்கின் தலைவன் மும்பைத் தமிழர் என்பது தெரியவந்துள்ளது. 

மும்பை உள்பட அதன் சுற்றுப்பகுதியிலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் போலீசுக்கே சவால் விட்டது, ’தக்- தக்’ கும்பல். இந்த கும்பல் எப்போது எங்கே எப்படித் திருடும் என்று யாருக்கும் தெரியாது. தினமும் ஒரு திருட்டு என போலீஸ் காரர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்த, இந்தக் கும்பலை தேடோ, தேடென்று தேடி வந்தது மும்பை போலீஸ்!


Advertisement

என்ன செய்வார்கள் இவர்கள்? 
டிராபிக்கில் நிற்கும் கார்களை நோட்டம் விடுவார்கள். எந்த காரின் பின் சீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வார்கள். அந்த காரை கும்பலாகப் பின் தொடர்வார்கள். ஒருவர் டிரைவர் சீட்டில் இருப்பவரின் கண்ணாடியைத் தட்டுவார். டிரைவரோ, ஓனரோ, கதவை இறக்கினால், ‘என்னாச்சுங்க, டயர்ல காத்தே இல்லை, பார்க்க லையா?’ என்பார் அக்கறையாக. அவர் இறங்கி பார்ப்பதற்குள் மறுபக்கம் நிற்கும் கும்பல், விலை உயர்ந்த பொருட்களை அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகும். இது ஒருவகை.

இன்னொரு ஸ்டைல் என்னவென்றால், விலை உயர்ந்த காரில் வேண்டுமென்றே லேசாக இடிப்பார்கள். விடுவாரா, டிரைவர்? இறங்கி இங்கே சண்டை போட்டுக்கொண்டிருக்க, அங்கே பொருட்களை சுருட்டிக்கொண்டு கும்பல் தப்பிவிடும். சமீபத்தில் பிரபல மும்பை பேஷன் டிசைனர் ஒருவரின் காரில் ’வண்டியில் ஆயில் லீக் ஆகுது, பாருங்க’ என்று சொல்லிவிட்டு இப்படி கொள்ளையடிக்க, அவர் கதறிவிட்டார் நடுரோட்டில்!

வேறு ஸ்டைலிலும் இவர்கள் திருடுவார்கள். பகலில் நகரின் ஒதுக்குப்புறமாக பல நாட்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகளை கண்காணிப்பார்கள். அங்கு திருட முடிவு செய்வார்கள். சம்பந்தப்பட்ட வீட்டின் முன் பூஜை செய்து, மஞ்சள் பையில் தேய்ங் காய், பழம் உள்ளிட்டப் பொருட்களை அந்தப் பகுதியின் ஜங்ஷனில் வீசுவார்கள். ஒவ்வொரு பகுதியில் இருந்து வரும் திருட்டு கும்பல் அடையாளம் காண்பதற்காக, இப்படி. இதை வைத்து ஸ்பாட்டுக்கு வந்துவிடும் கும்பல். பிறகு சவகாசமாகக் கொள்ளையடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

இந்தக் கும்பலை பிடிக்க முடியாமல் திணறி வந்தது போலீஸ். பல டீம் அமைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கும்பலை பிடித்த போலீசார் விசாரித்தனர். ஆறுமுகம், சக்திவேல், பிரவீன் கெய்க்வாட், யஷ்வந்த் ஆகியோர்தான் அவர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் படி, அய்யப்ப நாராயணன் செட்டியார், ரோகித் ஆகியோரை தேடி வந்தனர். ஆனால் இந்தக் கும்பல்தான் ’தக் தக்’ கோஷ்டி என்பது அப்போது தெரியாது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள்தான் அந்தக் கும்பல் என்பதும் இவர்களின் தலைவன் ரவிசந்திரன் முதலியார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து முதலியாருக்கு வலை விரித்தனர். சிக்கவில்லை. இவர், கோவண்டியில் வசித்து வந்தார். குடும்பம் நவி மும்பையில் வசித்து வந்திருக்கிறது. கோவண்டியில் இவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர் எப்படி இருப்பார் என்றே போலீசுக்கு தெரியாது. அங்கு சில நாட்களாக நோட்டம் விட்ட போலீசாருக்கு, அங்கிருந்த சலவைக் கடைக்காரர் ரவிச்சந்திரனை அடையாளம் காட்டியிருக்கிறார். பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

ஸ்டேஷனில் வைத்து விசாரித்தால், தனக்கு இந்தி தெரியாது என்றும் தமிழில் மட்டும்தான் பேசுவேன் என்று அடம் பிடித்திருக்கிறார். குடும்பத்தினர் பற்றிய எந்த தகவலையும் அவர் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால், அவருக்குத் தெரியாமல் அவர் குடும்பத்தை கண்டு பிடித்தனர் போலீசார். 

குடும்பம், நவி மும்பையில் இருந்துள்ளது. இவருக்கு மூன்று மகன்கள். ஒரு மகன் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அடுத்து எம்.எஸ் படிப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளார். மற்றொரு மகன் மெரைன் என்ஜினீயர். இன்னொரு மகன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவருகிறார்.

’உண்மையை சொல்லவில்லை என்றால் உங்கள் மகன்களை அழைக்க வேண்டி வரும்’ என்று போலீசார் சொன்னதும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார் ரவிச்சந்திரன் முதலியார். பிறகு தனக்கு நன்றாக இந்தி தெரியும் என்று தெளிவான இந்தியில் பேசத் தொடங்கிய அவர், செய்த குற்றங்களை ஒவ்வொன்றாகச் சொல்லியுள்ளார்.

அதில் ஒன்று, தாராவியில் எஸ்பிஐ ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப வந்த வேனில் இருந்து 1.6 கோடி ரூபாயை அடித்தது. அவரிடம் இருந்து பணக் கட்டுகளையும் நகைகளையும் கைப்பற்றியுள்ள போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

பல திடுக் கொள்ளைகளை நடத்திய தக் தக் கும்பல் தலைவன் தமிழர் என்பது மும்பை தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. 
 

தேங்காய் உடைத்து, பூஜை செய்து பயபக்தியுடன் திருட்டு: கும்பல் கைது!

 

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close