Published : 11,Apr 2018 10:41 AM

‘ரஜினி வாயை அசைக்க யாரோ டப்பிங் கொடுக்கிறார்கள்’ - பாரதிராஜா நையாண்டி!

Director-Bharathiraja-said-about-Rajinikanth-and-IPL-Protest

ரஜினி வாய் திறக்கும் போது லிப் மூமெண்ட் மட்டும் தான் அவருடையது, டப்பிங் யாரோ பேசுகிறார்கள் என இயக்குநர் பாரதிராஜா விமர்சித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடும்போது, சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என நேற்று அண்ணா சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட இடங்களில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களுடையே அமைப்புகளை சார்ந்த ஆயிரக்கணக்கானோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சேப்பாக்கம் முழுவதும் முடங்கியது. போலீஸார் தடியடி நடத்துவது, போலீஸார் மற்றும் ஐபிஎல் போட்டியை காண வந்தவர்களை போராட்டக்காரர்கள் தாக்குவது போன்ற சம்பவங்களும் அரங்கேறின. போராட்டத்தையும் மீறியும் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சில ஐபிஎல் ரசிகர்கள் போல் வந்து, மைதானத்திற்குள் காலணியை வீசினர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சீருடையில் இருக்கும் போலீஸாரை தாக்குவது நாட்டிற்கு பேராபத்து என்று கூறியிருந்தார். இதைத்தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாதுகாப்பு குழு அமைப்பின் சார்பில் பாரதிராஜா, சீமான், தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமீர், வெற்றிமாறன், கவுதமன் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது பேசிய பாரதிராஜா, ‘போராட்டக்காரர்கள் தங்கள் பணியை சரியாக செய்தார்கள். அடி வாங்கினார்கள், போலீஸாரால் தாக்கப்பட்டார்கள். அதை காணும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எந்த செயலுக்கு ஒரு வினை இருந்தால் தான், அதற்கு எதிர்வினை இருக்கும். போலீஸார் பெண்களை பிடித்து தள்ளினர். அதை ஒரு இளைஞர் தடுத்தார். அந்த இளைஞரின் கையில் அடித்தனர். அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் போலீஸாரை தள்ளினார். இதனை என்னவென்று ஊடகங்கள் கூற வேண்டும். எதிர்வினையை மட்டும் கூறக்கூடாது” என்றார்.

பின்னர் ரஜினிகாந்த் கருத்து பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் போலீஸார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை, போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதை அவர் ஏன் கண்டிக்கவில்லை? எத்தனையோ பேர் தாக்கப்பட்டது தொடர்பாக அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் கைது செய்யப்பட்ட போது கூட பேசவில்லை. காவிரி பிரச்னையில் எத்தனையோ முறை தமிழ்நாடு வாகனங்களையும், ஓட்டுநர்களையும் கர்நாடக எல்லை சுங்கச்சாவடிகளில் தாக்கியுள்ளனர். அப்போது ரஜினி என்ன செய்தார். கேபிஎன்னுக்கு சொந்தமான 200 பேருந்துகள் எரிக்கப்பட்டபோது அவர் என்ன சொன்னார்? அதெல்லாம் அவருக்கு வன்முறையாக இல்லையா? 

இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம். ஆனால் இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் என்று. ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடியவர்களை அவர் பாராட்டி இருக்க வேண்டாமா? தற்போது மட்டும் ரஜினி வாய் திறப்பது, லிப் மூமெண்ட் மட்டும் தான் அவருடையது, டப்பிங் யாரோ பேசுகின்றார்கள். அவர் இன்னும் முழு அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளவில்லை. தன்னை அரை அரசியல்வாதியாகத்தான் சொல்லிக்கொள்கிறார். முதலில் அவர் முழு அரசியல்வாதியாக இறங்கி நடக்கட்டும். பின்னர் என்ன குறை என்பதை நாங்கள் கூறுகிறோம்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவது நிச்சயம் என்று தெரிவித்தார். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நாளை காலை 9 மணிக்கு விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும், போராட்டத்தின் போது கருப்புக்கொடியை மட்டும் தான் பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். 
 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்