Published : 24,Mar 2018 05:49 AM
உதவியாளர்களின் முழு சம்பளத்தை தர முன்வந்த நடிகர்கள்

தங்களது உதவியாளர்களுக்கான முழு சம்பளத்தையும் தாங்களே அளிப்பதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் முன்வந்துள்ளனர்.
திரைத்துறை சார்ந்த பிரச்னைகள் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மற்ற சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கத்தினர் நடிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், நடிகர்களின் உதவியாளர்களுக்கு இனி ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அளவிலான ஊதியம் மட்டுமே வழங்குவதென தயாரிப்பாளர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கு மேல் ஆகும் தொகையை நடிகர்களே வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்று முழு சம்பளத்தையும் தானே வழங்குவதாக நடிகர் சூர்யா தெரிவித்ததையடுத்து, விஷால், கார்த்தி ஆகியோரும் தங்கள் உதவியாளர்களின் சம்பளத்தை தாங்களே தருவதாக முன் வந்தனர். இதன் மூலம் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை தயாரிப்பு செலவு குறையும் என்பதால் தயாரிப்பாளர் சங்கம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தது. இந்த அறிவிப்பை நடிகர் சங்கத் தலைவர் நாசர் வரவேற்றுள்ளார்.