Published : 24,Mar 2018 05:00 AM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கவும், ஆலையை மூட வலியுறுத்தியும் தூத்துக்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்தக் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள உள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை குமரெட்டியார்புரம் கிராமம் அருகில் அமையவுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள் அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் பூங்கா முன்பாகக் கூடி விடிய விடிய போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் பிப்.,13 ஆம் தேதி பிற்பகல் கிராமத்தினர் உட்பட 231 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் மரத்தடி நிழலில் போராட்டத்தை அமைதியான முறையில் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 40 தினங்களாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் குமரெட்டியார்புர மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு சார்பில் ஆலையை மூடவும், விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கவும் வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி, புதியம்புத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
.