[X] Close

இலங்கை வீரர்களுடன் மோத என்ன காரணம்? பங்களாதேஷ் வீரர்கள் விளக்கம்!

We-won-t-create-anything-bad-about-this-incident--Tamim-Iqbal

முத்தரப்பு டி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டியின் கடைசி ஓவரை இலங்கை வீரர் உதனா வீசினார். முதல் பந்து பவுன்சராக பங்களாதேஷ் வீரர் முஷ்தாபிஷூ ரகுமான் தோள்பட்டைக்கு மேல் சென்றது. நோ-பால் கொடுக்கவில்லை. இரண்டாவது பந்தும் அதே மாதிரி உயரத்தில் சென்றது. லெக் அம்பயர் நோ பால் சிக்னல் கொடுத்தாராம். அதை நடுவர் கவனிக்கவில்லை. மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பால் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். அப்போது தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த பங்களாதேஷ் மாற்றுவீரர், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிடம் ஏதோ கோபமாக சொன்னார். இதனால் இலங்கை வீரர் ஒருவர் அரை தள்ளினார். இது மோதலாக மாறியது. டிரெஸிங் ரூமில் இருந்த பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்கு வெளியே வந்து ஏதோ கத்தினார். பின்னர் ’ஆட வேண்டாம், வெளியே வாருங்கள்’ என்று வீரர்களை வரச் சொன்னார். இதையடுத்து பரபரப்பானது. அதே நேரம் பங்களாதேஷ் டிரெஸிங் ரூமில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 


Advertisement

இந்தச் சம்பவம் குறித்து பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் கூறும்போது, ‘கடைசி கட்டத்தில் உணர்ச்சி வயமாகிவிட்டது. லக் அம்பயர், நோ- பால் சிக்னல் கொடுத்ததை நாங்கள் பார்த்தோம். ஆனால், அம்பயர் அதைக் கவனிக்கவில்லை. இதை அவரிடம் புகாராகச் சொன்னோம். அவ்வளவுதான். இந்தச் சம்பவத்தை வைத்து வேறு எதையும் தவறாக உருவாக்கும் எண்ணம் இல்லை. வெற்றிக்கு பிறகு எங்கள் கோபம் மறந்துவிட்டது. இந்தப் போட்டியில் நான் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.


Advertisement

பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறும்போது, ‘டி20 போட்டியில் இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது. அதிக உற்சாகமாகவும் உணர்வு பூர்வமாகவும் இந்தப் போட்டி அமைந்துவிட்டது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது உண்மைதான். பேட்டிங்கில் நான் நூறு சதவிகிதம் சிறப்பாக செயல்படவில்லை என்பது தெரியும். இலங்கைக்கும் எங்களுக்கும் மைதானத்தில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால், களத்துக்கு வெளியே நாங்கள் நண்பர்கள். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டோம். ஒரு கேப்டனாக நான் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தப்போட்டிகளில் கவனமாக இருப்பேன்’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close