Published : 23,Feb 2018 07:58 AM
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா..? அப்போலோவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என மார்ச் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பதால், அவரது உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் மகள் என உரிமைக் கோரும் அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்காக டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அம்ருதா கூறிய நிலையில், அதற்கு அரசு தரப்பு ஆட்சேபணை தெரிவித்தது.
இதனிடையே ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்தே அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் புதிய மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை சேகரிக்க அம்ருதா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா..? என அப்போலோ நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி மார்ச் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அம்ருதா குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டியிருப்பதால் அரசு தரப்பில் ஒரு வார காலம் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனிடையே ஜோசப், புகழேந்தி ஆகியோரின் இணைப்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்ருதா மற்றும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தாய் - மகள் வழக்கில் இணைப்பு மனுக்கள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.