
கன்னியாகுமரி மாவட்டத்தில் மானிய விலை இருசக்கர வாகனத்திற்கான விண்ணப்பத்திற்கு 225 ரூபாய் கட்டாய வசூல் கேட்கப்பட்டதால் பொதுமக்களுக்கும் பேரூராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மானிய விலை இருசக்கர வாகனத்திற்காக விண்ணப்பிப்பதற்கு உள்ளாட்சி அலுவலகங்களில் ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். அப்போது விண்ணப்பம் ஒன்றிற்கு 225 ரூபாய் கட்டாய வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்கவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து கல்லுக்கூட்டம் பேரூராட்சியில், விண்ணப்பத்திற்கு வந்திருந்தவர்கள் கூறும்போது, காலை 10 மணிக்கே இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க வந்ததாகவும் ஆனால் 12.30 மணி வரை பேரூராட்சி ஊழியர்கள் தங்களை காத்திருக்க சொன்னதாகவும் கூறியுள்ளனர். பிறகு 225 ரூபாய் அளித்தால்தான் உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். எதற்காக கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது திட கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வசூல் செய்கிறோம் என்றும் பதிலளித்துள்ளனர்.