Published : 22,Jan 2018 11:24 AM
புதிதாக 2ஆயிரம் பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு

40 சொகுசுப் பேருந்துகள் உள்ளிட்ட 2 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், 2 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பேருந்துகள் வருகிற மே மாதம் முதல் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆம்னி பேருந்துகளைப் போல, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து அதிரடி மாற்றங்களை செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளை நவீன வசதிகளுடன் கூடிய 40 படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகளையும், கழிப்பறை வசதிகளுடன் கூடிய 20 பேருந்துகள் மற்றும் 40 சொகுசு பேருந்துகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரில் மக்கள் பயன்பாட்டிற்கு 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசு பங்களிப்புடன் வாங்குவதற்கான பணி இறுதி கட்டத்தில் உள்ளது.