Published : 17,Nov 2017 07:39 AM
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்கில் விநியோகிக்கப்படும் மதுபானங்களின் தரத்தை தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களில் அதிகளவு வேதிப்பொருள் இருப்பதாக சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மதுபானங்களை உற்பத்தி செய்து டாஸ்மாக் கடைக்கு அனுப்பும் 17 நிறுவனங்களும் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைப்பட்ட 4 வார காலத்தில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையரக அதிகாரிகள் அந்தந்த மதுபான நிறுவனங்களுக்கு சென்ற மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை டிசம்பர் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.