Published : 17,Mar 2023 08:42 PM

'கம்பேக்' கொடுத்து கே.எல்.ராகுல் அசத்தல்! ஆஸி.,பவுலிங்கை சமாளித்து வெற்றிப்பெற்ற இந்தியா

KL-Rahul-is-amazing-by-giving-a--comeback---Aussie--India-won-by-overcoming-the-bowling

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றிபெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஒருநாள் போட்டி கேப்டன் ரோகித் சர்மா, அவரது உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டதால், இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்கினார். இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தார்.

image

அதன்படி, ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் 5 ரன்கள் எடுத்த டிராவிஸ், முகம்மது சிராஜ் பந்தில் போல்டாகி வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுமுனையில் மிட்செல் தூணாக நின்று விளையாடினார். சொல்லப்போனால், இந்தப் போட்டி, பந்துவீச்சாளர்கள் வசம் சென்றது என்றே சொல்ல வேண்டும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகம்மது ஷமியும், சிராஜும் மிரட்டல் வேட்டை நடத்தினர். முகம்மது ஷமி, ஜோஸ் இன்கில்ஸ் மற்றும் கேமரூன் கிரீனை போல்டாக்கி வெளியேற்றினார்.

இவர்களுடைய அசாத்திய பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் சீட்டுக் கட்டாய் சரியத் தொடங்கினர். அவர்களுக்கு பக்கபலமாக ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் பந்துவீசி பிற ஆஸ்திரேலிய விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் அந்த அணி, 35.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க பேட்டர் மிட்செல், 65 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உதவியுடன் 81 ரன்கள் எடுத்தார்.

image

ஆஸ்திரேலிய வீரர்களில் 6 பேர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதில் இருவர் (சீன் அப்பாட், ஆடம் ஜம்பா) டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பாண்டியா மற்றும் குல்தீப் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்தப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய முகம்மது ஷமி, தாம் வீசிய 6 ஓவரில் 2 மெய்டன்களுடன் 17 ரன்கள் மட்டுமே வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க பேட்டராகக் களமிறங்கிய இஷான் கிஷன் 3 ரன்களில் ஸ்டோனிஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அதற்குப் பின் களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 4 ரன்களில் ஸ்டார்ச் பந்தில் எல்.பி.டபிள்யூவானார். அதேபோல் இந்தியாவின் 360 என்றழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ்வும் அவருடைய பந்துவீச்சிலேயே எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த மற்றொரு தொடக்க பேட்டர் சுப்மான் கில் 20 ரன்களில் வெளியேறினார்.

image

அவரையும் ஸ்டார்ச்சே வெளியேற்றினார். பின்னர் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கைகோர்த்தனர். இருவரும் பொறுமையுடன் விளையாண்டதுடன், மேலும் விக்கெட் விழாமல் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். என்றாலும், இந்த இணையை ஸ்டோனிஸ் பிரித்தார். 31 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் மூலம் 25 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியாவை ஸ்டோனிஸ் வெளியேற்றினார். இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் ஆல்ரவுண்டர் ஜடேஜா இணைந்தார். இருவரும் நிதானமாய் விளையாண்ட நிலையில், கே.எல்.ராகுல் 73 பந்துகளைச் சந்தித்து அரைசதம் அடித்தார். அவருக்கு இது, 13வது அரைசதம் ஆகும். டெஸ்ட் தொடரில் ரன் எடுக்காமல் விமர்சனத்தைச் சந்தித்த நிலையில், இந்தப் போட்டியில் அரைசதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் அணியை வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி, 39.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 91 பந்துகளைச் சந்தித்த ராகுல், 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக மறுமுனையில் நின்ற ரவீந்திர ஜடேஜா 69 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், கே.எல்.ராகுல் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இன்றைய போட்டி, டெஸ்ட்டை நினைவுப்படுத்தினாலும், இறுதியில் போராடி வெற்றிபெற்றதைப் பாராட்டலாம். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்ச் 3 விக்கெட்களையும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி வரும் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இதில் ரோகித் சர்மா கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

image
இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவுடன் இணைந்து நேரில் கண்டுகளித்தார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்