Published : 09,Mar 2023 06:35 PM
”142 நாட்கள் கழித்து ஏன் ஆளுநர் விளக்கம் கேட்கிறார்? 18 பேர் பலி ஆகிட்டாங்களே!” - பாமக

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆளுநர் எடுத்த முடிவு மிக பெரிய தவறு என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாமகவும் இந்த விவகாரத்தில் தன்னுடைய எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும், அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அவர்களும் செய்தியாளரை சந்தித்து பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏற்பட்ட 18 உயிரிழப்புக்கு ஆளுநர் தான் காரணம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பத்திரிக்கையாளார்களிடம் அவர் பேசுகையில், "142 நாட்களுக்கு பிறகு, மீண்டும் ஆளுநர் விளக்கத்தை கேட்டு இருக்கிறார். இது எங்களுக்கு புரியாத புதிர். இதற்கு ஆளுநர் பதில் சொல்லவேண்டும். ஏன் இந்த தாமதம்? எதனால் இந்த தாமதம்? இந்த விளக்கத்தை நீங்கள் முன்பே கேட்டு இருக்கலாமே? இந்த 142 நாட்களில் 18 பேரின் உயிர் போய் இருக்கிறது. இது பெரிய குற்றமாகும். இந்த உயிர்கள் போனதற்கு காரணம் ஆளுநர் தான்” என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது ஜனநாயக விரோத போக்கு என்று பாமக வழக்கறிஞர் பிரிவின் தலைவர் பாலு தெரிவித்துள்ளார்.
“தொடர் தற்கொலைகளைத் தடுப்பதற்கு உடனடியாக மாநில அரசு ஒரு அனைத்து கட்சியின் கூட்டத்தைக்கூட்டி வரும் கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” மேலும் தொடர்ந்து பேசிய அவர், ”மாநில ஆளுநர்கள் மாநில அமைச்சருடைய முடிவுகளுக்கு விரோதமாக அல்லது அதற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் நடந்துக்கொள்ளக்கூடிய இந்த போக்கு என்பது அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உகந்ததாக இல்லை.” என்றார்.