Published : 07,Mar 2023 09:36 PM

"சம்பள பாக்கியையாவது கொடுப்பீங்களா இல்ல..."- மஸ்க்கை ட்வீட்டில் சாடிய முன்னாள் ஊழியர்!

Fired-Twitter-employee-bashed-Elon-Musk

ட்விட்டர் வலைதளத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், எலான் மஸ்க்கை ட்விட்டரிலேயே கடுமையாகச் சாடியுள்ளார்.

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. இதை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைதளத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இத்தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும்.

image

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 200 ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்திருந்தார். அதில் கணினி பொறியாளர்கள், மேலாளர்கள், கணினி வல்லுநர்கள், உதவியாளர்களும் அடக்கம். பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் எலான் மஸ்க்கையும், அவரது நிறுவனத்தையும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அப்படித்தான், ஐஸ்லாந்தின் தொழிலதிபராகக் கருதப்படும் ஹரால்டுர் தோர்லீஃப்சன் (haraldur thorleifsson) குற்றஞ்சாட்டி உள்ளார். ஹல்லி (Halli) என்று அழைக்கப்படும் இவர், Ueno என்ற நிறுவனத்தை நடத்தியவர். கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை, ட்விட்டரிடம் விற்றார். தனது நிறுவனத்தை ட்விட்டரிடம் விற்றபிறகு ட்விட்டர் நிறுவனத்திலேயே வர்ணனையாளராகப் பணி புரிந்துள்ளார்.

இந்த நிலையில், எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு, அந்த நிறுவனத்துடன் இணைந்த பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இதில் ஹரால்டுர் தோர்லீஃப்சனும் ஒருவர். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கை டேக் செய்து பதிவிட்டிருக்கும் அவர், “அன்புள்ள @elonmusk 9 நாட்களுக்கு முன்பு எனது பணி தொடர்பான விவரங்கள் திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் நான் உங்கள் நிறுவனத்தில் பணியாளரா... இல்லையா என்பதில் சந்தேகம் எழுந்தது. உங்கள் ஹெச்.ஆர் அவர்களாலும் இதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனது இமெயில்களுக்கு நீங்களும் பதிலளிக்கவில்லை. போதுமான மக்கள் ரீட்வீட் செய்தால், நீங்கள் எனக்கு இங்கே பதில் அளிப்பீர்களா?” என கேட்டிருந்தார்.

image

மேலும் அவர், “என்னை பணிநீக்கம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. அது முற்றிலும் நியாயமானது. ஆனால் பொதுவாக, அது (பணிநீக்கம்) எப்போது நடக்கும் என்று குறிப்பிட்ட பணியாளர்களுக்கு கடிதம் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ நிறுவனம் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். எனக்கு அப்படி எதும் கிடைக்கப்பெறவில்லை. உங்களுக்கும் பிறருக்கும் பல மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தும் 9 நாட்களாக அப்படி எந்தக் கடிதமும் வேறு எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கும் ஹல்லி, ட்விட்டர் தளத்தின் முன்னாள் எம்.டியான ஜாக் டோர்சியைக் குறிப்பிட்டும் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ”ஹாய் @ஜாக் இந்த விஷயத்தில் நீங்கள் செய்த உதவியை நான் மிகவும் பாராட்டுகிறேன். நீங்கள் சொன்னதால் அதில் சேர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ட்விட்டர் ஊழியர்களைப் படிப்படியாகக் குறைத்து வரும் எலான் மஸ்க், ட்விட்டர் புளூ டிக்கிற்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மஸ்க் இவருக்கு பதிலளித்துள்ளார். அதில், “நீங்கள் என்ன வேலை செய்து வந்தீர்கள்?” என்றுள்ளார் மஸ்க். அதற்கு கிடைத்த அடுத்தடுத்த பதில்களில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் “சம்பள பாக்கியையாவது கொடுப்பீர்களா அல்லது தவிர்ப்பீர்களா” என எலான் மஸ்க்-ஜ டேக் செய்து மீண்டும் ட்வீட் போட்டிருக்கிறார் ஹல்லி!

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்