Published : 03,Mar 2023 12:48 PM
”தகாத முறையில் உற்றுப் பார்த்தார்” -ஊபர் ஓட்டுநர் மீது பெண் பத்திரிகையாளர் பகிரங்க புகார்!

ஊபர் ஆட்டோவில் பயணித்தபோது ஓட்டுநர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டெல்லி பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
டெல்லியிலுள்ள பிரபல ஊடகத்தில் பணிபுரிந்துவரும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் நியூ ஃப்ரண்ட்ஸ் காலனியிலிருந்து மால்வியா நகரிலுள்ள தனது நண்பரை பார்க்க செல்வதற்காக ஊபர் ஆட்டோவை புக் செய்திருக்கிறார். ஆட்டோவில் பயணித்தபோது ஓட்டுநர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் கூறியுள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் வினோத் குமார் எனவும், சைடு கண்ணாடி வழியாக அவர் தன்னை தகாத முறையில் பார்த்ததாகவும் கூறியுள்ளார். குறிப்பாக வினோத் குமார் தனது மார்புப்பகுதியை உற்றுநோக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊபரின் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்த முயற்சித்ததாகவும், ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்குகையில், “எனது வீட்டிலிருந்து நண்பர் தங்கியுள்ள இடத்திற்கு செல்வதற்காக ஆட்டோ புக் செய்தேன். சிறிது நேரத்தில் அந்த ஓட்டுநர் என்னை ஆட்டோவின் சைடு கண்ணாடி வழியாக பார்ப்பதை கவனித்தேன். குறிப்பாக அவர் எனது மார்பகங்களை உற்றுப்பார்த்தார். எனவே நான் இடதுபக்க கண்ணாடியில் தெரியாதவண்ணம் சற்று வலதுபக்கம் நகர்ந்து உட்கார்ந்துகொண்டேன். பின்னர் அவர் வலதுபக்க கண்ணாடியில் பார்க்க ஆரம்பித்தார். அதனால் எந்த கண்ணாடியிலும் தெரியாதவண்ணம் இடதுபக்க மூலைக்கு நகர்ந்து ஒட்டி அமர்ந்துகொண்டேன்.
I then made a short video - attached with this tweet - warning the driver again that I was about to raise a complaint. He then nodded in affirmation when I asked him if I should raise a complaint. @Uber_Support
— Arfa Javaid (@javaidarfa_) March 1, 2023
ஆனாலும் அந்த நபர் பின்னால் திரும்பி திரும்பி என்னை பார்த்துக்கொண்டே வந்தார். நான் முதலில் ஊபரின் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்த முயற்சித்தேன். ஆனால் எந்த பயனுமில்லை. மீண்டும் அந்த எண்ணை முயற்சித்தபோது நெட்வொர்க் சரியாக இல்லாததால் சரியாக கேட்கவில்லை. அதன்பிறகு அந்த ஓட்டுநரை சிறு வீடியோ எடுத்தேன் ” என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டு, இதுகுறித்து புகாரளிப்பேன் என ஓட்டுநரிடம் கூறியபோது, புகாரிளித்துக்கொள் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்திடம் புகார் வந்திருப்பதாகவும், நகர போலீசாருக்கு இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.