Published : 23,Feb 2023 09:52 AM

ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு தாய்மார் உயிரிழப்பு - கவலை தரும் ஐ.நா. அறிக்கை

A-Woman-Dies-Every-2-Minutes-During-Pregnancy-Or-Childbirth-UN

ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பக் காலத்தின் போதே  அல்லது பிரசவத்தின் போதோ இறக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்தாலும், கர்ப்பம் அல்லது பிரசவ சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பேறுகால இறப்பு விகிதம் 34.3 சதவீதமாக குறைந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களில் 339 தாய்மார்கள் உயிரிழந்திருந்தனர். அதேசமயம் 2020ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களில் 223 தாய்மார்கள் உயிரிழந்திருக்கின்றனர். 2020இல் நாளொன்றுக்கு சுமார் 800 பெண்கள் கர்ப்பக் காலத்தின் போதே  அல்லது பிரசவத்தின் போதோ இறந்திருக்கிறார்கள்.

image

மகப்பேறு இறப்புகள் பெரும்பாலும் உலகின் ஏழ்மையான நாடுகளிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பதிவாகியுள்ளன. 2020இல் பதிவான இறப்புகளில் 70 சதவீத இறப்புகள் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் பேறுகால இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதேசமயம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பேறுகால இறப்பு 17 சதவீதமும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 15 சதவீதமும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளில் பேறுகால இறப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

image

மனித உரிமை மீறல்கள் அதிகமாக அரங்கேறும் ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பேறுகால இறப்பு விகிதம் உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கடுமையான இரத்தப்போக்கு, நோய்த்தொற்று, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற காரணங்களால் இங்கு பிரசவகால இறப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்த இறப்புகள் உரிய சிகிச்சை மூலம் தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை என்றும் ஆனால் இந்நாடுகளில் நிலவும் மோசமான சுகாதார கட்டமைப்பால் பேறுகால இறப்பு சர்வசாதாரணமாக நடக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது ஐநா.


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்