Published : 09,Feb 2023 01:24 PM
யார் பூசாரியாக செயல்படுவது? இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை.. நீதிமன்றம் கொடுத்த அட்வைஸ்

யார் பூசாரியாக செயல்படுவது என்பதில் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமங்கலம் தாலுக்கா எம்.பெருமாள்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருமங்கலம் தாலுக்கா மதிப்பனூர் , எம்.பெருமாள்பட்டியில் பேச்சிவிருமன் கோயில் உள்ளது. இந்த கிராம கோவிலில் யார் பூசாரியாக இருப்பது என்பதில் இருவருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிராம கோவிலை பூட்டுவதற்கு உண்டான நடவடிக்கையை, திருமங்கலம் தாசில்தார் மேற்கொண்டார் . இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே கோவிலை பூட்டிய தாசில்தாரின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,
* கிராம கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது இருவருக்கு இடையே உள்ள பிரச்சனை. அதற்காக கிராம கோவிலை பூட்டக்கூடாது.
* கோவிலை பொது வழிபாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும்.
* ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டாலோ, குற்றம் நடந்தாலோ, சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்" என தெரிவித்தார்.