Published : 29,Jan 2023 08:18 AM
ஜூஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு சோப்பு திரவம் விநியோகம்: 7 பேருக்கு உடல்நல பாதிப்பு

உணவகத்தில் பழ ஜூஸை குடித்த சிறிது நேரத்திலேயே 7 வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றுடன் குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில், கடந்த 16ஆம் தேதி வூகாங் என்ற பெண்மணி அவரின் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேருடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார். உணவகத்தில் அவர்கள் பழ ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த உணவகத்தின் பணியாளர் அவர்களுக்கு ஜூஸ் கொடுத்துள்ளார்.
பழ ஜூஸை குடித்த சிறிது நேரத்திலேயே அந்த 7 பேருக்கும் தலைசுற்றுடன் குமட்டல், வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தீவிர சிகிச்சைக்குப் பின் 7 பேரின் உடல்நிலை சீராக உள்ளது.
இதை வூகாங் வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த வீடியோவை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார். இருப்பினும், இந்த தகவல் உள்ளூர் ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், பார்வை குறைபாடு உள்ள பணியாளர் பாட்டிலில் கொண்டு வந்த ஜூஸ்தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்றும் அது ஜூஸ் இல்லை என்பதும் தெரியவந்தது. பார்வை குறைபாடு உள்ள பணியாளர் ஜூஸ் கலவைக்கு பதில் தரையை சுத்தம் செய்யும் சோப்பு திரவத்தை தவறுதலாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்மணி வூகாங் தான் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில், நாங்கள் 7 பேரும் நலமுடன் தற்போது இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட உணவகத்தில் இழப்பீடு கோர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.