Published : 26,Jan 2023 06:03 PM
‘பதான்’ படம் படைத்த 10 சாதனைகள் - பாய் காட்டுக்கு பதிலடி, கிங் கானுக்கு குவியும் பாராட்டு!

நீண்டநாள் கழித்து ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பாலிவுட்டில் இந்தப் படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும் பாய்காட் ட்ரெண்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதற்கு, படக்குழுவினருக்கு பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. அப்பாஸ் டயர்வாலா மற்றும் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்துள்ள இந்தப் படத்திற்கு சஞ்சித் பால்ஹரா, அங்கீத் பால்ஹரா பின்னணி இசை அமைத்துள்ளனர். விஷால் -சேகர் பாடல்கள் செய்துள்ளார். ஆரிஃப் ஷேக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஷாருக்கான் ‘ரா’ உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் தீபிகா படுகோனே முன்னாள் ஐஎஸ்ஐ ஏஜெண்டாக நடித்துள்ளார். ஜான் ஆப்ரஹாம் வில்லனாகவும், டிம்பிள் கபாடியா, அஷூதோஷ் ராணா, ஷாஜி சௌத்ரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சல்மான் கான் கேமியோ ரோலில் வந்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று வெளியான இந்தப் படம் இந்தியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
அதன்படி,
1. இந்தியாவில் இருந்து வெளியான இந்தி திரைப்படங்களில் உலக அளவில் அதிகளவு ஸ்கிரீன்களில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
2. இதுவரை வெளியான இந்தி மொழிப் படங்களில், அதிக வசூலை ஒரேநாளில் ஈட்டியப் படம் என்ற பெருமையை கொண்டுள்ளது. (ரூ. 106 கோடி)
3. விடுமுறை தினம் இல்லாமல் வார நாட்களில் வெளியாகி முதல் நாளில் மட்டும் அதிக வசூலை கலெக்ஷன் செய்தப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
4. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் தயாரிப்பில் இருந்து வெளியாகி, முதல் நாளில் 50 கோடி ரூபாய்க்கும் கூடுதலான வசூலைப் பெற்ற 3-வது படம் இதுவாகும். இதற்கு முன்னதாக இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ‘வார்’ திரைப்படம் முதல் நாளில் 53.35 கோடி ரூபாயும், ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ 52.25 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.
5. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் விநியோகித்தப் படங்களில் ‘ஏக் தா டைகர்’ மற்றும் ‘வார்’ படங்களுக்குப் பிறகு முதல்நாளில் ரெக்கார்டு படைத்தப் படம் ‘பதான்’.
6. ஷாருக்கானின் படங்களிலேயே இந்தப் படம்தான் முதல் நாளில் அதிக வசூல்
7. அதேபோல் தீபிகா படுகோனே, 8. ஜான் ஆப்ரஹாம், 9. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் 10. சித்தார்த் ஆனந்த் ஆகியோருக்கும் இந்தப் படம் ரெக்கார்டு பிரேக்கிங் ஆக அமைந்துள்ளது.
இதற்கிடையில், ‘பதான்’ பட குழுவினருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவுசெய்துள்ள ட்வீட்டில், “ஹே பாய்காட் வெறியர்களே... உஷ்..உஷ்..உஷ்.. கிங் கானான ஷாருக்கான் மீண்டும் வந்துள்ளார். தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. #பேஷாரம் சங்” என்று சர்ச்சை பாடல் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
Hey #BoycotBigots Shhhhhhhhh … #HallaBol King Khan @iamsrk is back.. keep rocking @deepikapadukone#JohnAbraham and team #Pathan ..#BesharamRang
— Prakash Raj (@prakashraaj) January 25, 2023