Published : 21,Jan 2023 12:02 PM

சிவகார்த்திகேயன் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ்?

Sivakarthikeyan-to-join-hands-with-director-A-R-Murugadoss-Here-are-the-deets

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுடன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அஜித்தின் ‘தீனா’ படம் வாயிலாக தமிழ் திரையுலகில், மாஸ் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து விஜயகாந்தின் ‘ரமணா’, சூர்யாவின் ‘கஜினி’, ‘7 ஆம் அறிவு’, விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இதையடுத்து தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரை வைத்து கடந்த 2020-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘தர்பார்’ படம் தோல்வியடைந்தது.

மேலும், அவரது ஒவ்வொரு படம் வெளியாகும் போதெல்லாம், கதை திருட்டு சர்ச்சையிலும் சிக்கியதால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாக கூறப்பட்டது. இதனால் தான் சமீபத்தில் இவர், விஜய்யுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக எல்லாம் தகவல் கசிந்த நிலையில், அதன்பிறகு எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டே இவர்கள் இருவரும் கதை தொடர்பாக சந்தித்ததாகவும், தற்போது அது உறுதி செய்யப்படும் வகையில் பாசிட்டிவ்வாக சென்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

image

இந்தப் படத்தை மதுவின் லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பிரின்ஸ்’ படம் தோல்வியடைந்த நிலையில், அடுத்ததாக சயின்ஸ் பிக்ஷன் கதையான ‘அயலான்’ படத்தை சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். மேலும், மடோன் அஸ்வினின் ‘மாவீரன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்