Published : 26,Sep 2017 08:30 AM
திருவாரூரில் பரவலாக மழை: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கங்களாஞ்சேரி, நன்னிலம், பேரளம், கொரடாச்சேரி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.