Published : 25,Dec 2022 10:04 AM

`அன்புனா என்னனா’ நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு இதுவரை விஜய் சொன்ன குட்டி ஸ்டோரீஸ்!

Lovely-Cuties-Story-by-Vijay

நடிகர் விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கிறதோ அதைவிட, அவரது ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடிகர் விஜய் அரசியல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும், அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தடைகளை சந்தித்து வருகின்றார். இதனை வெளிப்படுத்தும்விதமாக தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், குட்டி கதை ஒன்றை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்தக் குட்டி கதையின் மூலம் தனது நிலைப்பாட்டை ரசிகர்களுக்கு தெரியவைப்பார் நடிகர் விஜய். இதனால் விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே எப்போதும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு பல்வேறு காரணங்களால் ஆடியோ வெளியிட்டு விழா வைக்க முடியாமல் போனது, அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

image

இந்நிலையில் இரண்டு வருடங்களிற்கு பிறகு வாரிசு படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடந்தது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்துகொண்ட அவருடைய செல்பி வீடியோவை அவர் ட்விட்டரில் பதிவிட, அது பதிவிட்ட ஒருமணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தற்போது ரசிகர்கள் விஜய் பேசிய வீடியோ கிளிப்களை பதிவிட்டும், அவருடைய குட்டிகதையை பதிவிட்டும் கொண்டாடி வருகின்றனர். அந்தக் குட்டிக்கதை என்ன? நடிகர் விஜய் இதுவரை சொன்ன குட்டிகதைகளும், தற்போதுள்ள வாரிசு பட இசை வெளியீட்டில் கதை மூலம் அவர் சொன்ன நிலைப்பாட்டையும் பற்றிய குட்டித்தொகுப்பை இதில் பார்க்கலாம்.

புலி குட்டி கதை:

ஒரு ஊர்ல ஒருத்தர் இருந்தாராம். சின்ன வயதில் இருந்தே அவருடன் படித்தவர்கள், உடன் இருந்தவர்கள்னு எல்லாரும் அவரை குறை சொல்லிக்கொண்டே இருந்தார்களாம். அவரும் அதையெல்லாம் சரி செய்து கொண்டே இருந்தாராம். அப்படி குறை சொல்லப்பட்டவர் பில்கேட்ஸ். இன்று அவர் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். ஆனால் அவர் மீது குறை சொல்லியவர்கள் எல்லாம் அவர் கம்பனியில் ஊழியர்களாக இருக்கிறார்கள்.

கதை நீதி: யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது.

image

மேடையில் எம்ஜிஆர் படத்தில் வந்த கதையை சொன்ன விஜய்: எம்ஜிஆர் நடிச்ச படத்துல அவரிடம் ஆறு பேர் `எங்க ஆறு பேரை திருத்திட்டிங்கனா இந்தியாவே திருந்திடுமா’ அப்படினு கேட்பாங்க. அதுக்கு எம்ஜிஆர், ஒரு இந்தியா மேப் எடுத்து, அதுக்கு பின்னாடி ஒரு மனிசனோட முகத்த வரைஞ்சிக்கொடுத்து, அதை கிழிச்சி போட்டுடுவாரு. போட்டுட்டு, இந்த இந்தியா மேப்ப ஒன்னா சேருங்கனு சொல்லுவாரு. அவங்களும் டிரை பண்ணுவாங்க. ஆனா, அவங்களால முடியாது. உடனே எம்.ஜி.ஆர் அவங்ககிட்ட `பின்னாடி இருக்க அந்த மனுசனோட முகத்த ஒன்னா சேர்க்குறதுக்கு ட்ரை பண்ணுங்க’னு சொன்னாரு. அவங்களும், சரினு கண்ணு காது மூக்கு கரக்டா சேர்த்துட்டாங்க. அப்போ எம்.ஜி.ஆர், `பின்னாடி என்ன இருக்குனு பாருங்க’னு சொல்வாரு. பார்த்தா... இந்தியா மேப் சரியா சேர்ந்திருக்குனு தெரியவரும். அப்போ எம்ஜிஆர் அவர்கள் சொல்லுவாங்க, `ஒரு மனுஷன சரிபண்ணா இந்தியா மேப்பே சரியாகிடுது, ஒவ்வொரு மனிசனையும் சரிபண்ணா ஏன் இந்தியாவே சரியாகாது?’

தெறி குட்டி கதை:

ஒரு முறை சீன அதிபர் மாவோ சாலையில் செல்லும் போது தலைவர் படங்களை விற்கும் சிறுவனை பார்த்தாராம். அங்கு மாவோவின் படங்களே இருந்ததாம். உடனே மாவோ அந்த சிறுவனிடம், உனக்கு என்னதான் என் மேல மரியாதை இருந்தாலும், நீ மற்ற தலைவர்கள் படங்களையும் விற்க வேண்டும் என்று கூறினாராம். உடனே அந்த சிறுவன், மற்ற தலைவர்களின் படம் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது, இந்த படம் மட்டும் தான் விற்காமல் இருக்கிறது என கூறினானாம்.

கதை நீதி: நான் தான் பெரியவன் என்ற எண்ணம் எப்போதும் இருக்க கூடாது.

image

சர்கார் குட்டி கதை:

ஒரு ராஜா காட்டுக்கு சென்றிருந்த போது அவருக்கு எலுமிச்சை பழச்சாறு செய்ய உப்பு தேவை பட்டதாம். அப்போது அங்கிருந்த அமைச்சர், பணியாள் ஒருவரை அழைத்து, அருகில் இருக்கும் கடைக்கு சென்று உப்பு எடுத்து வர சொன்னாராம். அதை தடுத்த மன்னர், அப்படி எல்லாம் எடுத்து வர கூடாது, அதற்கான தொகையை கொடுத்து வாங்கி வா என்றாராம். மிகப்பெரிய மன்னரான நீங்கள் எதற்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும் என மன்னரிடம் கேட்டதற்கு, 'ஒரு மன்னரான நானே இப்படி செய்தால், நாமும் காசு கொடுக்காமல் எடுத்து கொள்ளலாம் என பின்னால் வருபவர்களும் அதையே பின்பற்றி மொத்த ஊரையும் கொள்ளை அடித்துவிடுவார்கள்' என்றாராம்.

கதை நீதி: ஒரு தலைமையில் இருப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும்.

image

பிகில் குட்டி கதை:

ஒருவர் பூக்கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார். கிட்டத்தட்ட பொக்கே ஷாப் என வைத்துக்கொள்ளுங்கள். திடீர் என அவருக்கு வேலை போய்விட்டது. என்ன செய்வது என முழித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஒரு பட்டாசு கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த கடைக்காருக்கு இந்த நபர் முன்னர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்பதே தெரியாது. வேண்டப்பட்ட ஒருவர் கூறியதால் அந்த நபரை வேலைக்கு சேர்த்துவிட்டனர். பட்டாசு கடையில் உட்கார்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார் அந்த நபர்.

image

ஆனால் அவர் வந்ததில் இருந்து ஒரு வெடி கூட வியாபாராம் ஆகவில்லையாம். என்ன என விசாரித்த போது தான் தெரிந்தது, அந்த நபர் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து பட்டாசு மீது தெளித்து இருக்கிறார். பாவம் அவர் மீது எந்த தவறும் இல்லை. அது அவரோட தொழில்பக்தி. அவருக்கு தெரிந்த வேலையை அவர் செய்திருக்கிறார்.

கதை நீதி: விஷயம் என்னவென்றால், இந்த வேண்டியவர் வேண்டாதவர் என்பதை எல்லாம் விட்டுட்டு திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்கு உட்கார வைக்க வேண்டும்.

மெர்சல் குட்டி கதை:

image

ஒரு டாக்டர் தன் வண்டியை ரிப்பேர் செய்ய மெக்கானிக்கிடம் சென்றார். அப்போது மெக்கானிக் டாக்டரிடம், 'நானும் உங்களை மாதிரி தான் வேலை பார்க்குறேன். இந்த ஸ்பேர் பார்ட்ஸை மாற்றுகிறேன். இதில் இருக்கும் அடைப்புகளை சரி செய்கிறான். மொத்தமாக பழுது பார்க்கிறேன். ஆனால் எனக்கில்லாத மரியாதையும் பணமும் டாக்டரான உங்களுக்கு எப்படி கிடைக்கிறது' என்று கேட்டான். அதற்கு டாக்டர், 'நீ சொன்னது எல்லாம் சரி தான். ஆனால் இதை வண்டி ஓடி கொண்டிருக்கும் போதே இதையெல்லாம் செய்து பார், அப்போது புரியும்' என்றாராம்.

கதை நீதி: நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப தான் மரியாதை கிடைக்கும்.

மாஸ்டர் குட்டி கதை:

நம் அனைவருடைய வாழ்க்கையும் ஒரு நதி போல தான். நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அதனுடைய சொந்த பாதையில் சென்று கொண்டிருக்கும். அப்படி செல்லும் போது சிலர் விளக்குகளை ஏற்றி நதியை வணங்குவார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும். மற்றொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதியை வரவேற்பார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும். வேறொரு இடத்தில் நம்மை பிடிக்காத சிலர் நதி மீது கல்லெறிந்து விளையாடுவார்கள். அதையும் பார்த்து நதி அமைதியாக போய்க்கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையும்.

image

கதை நீதி: நம்முடைய வாழ்க்கையில் நம்மை பிடித்தவர்களும் இருப்பார்கள், பிடிக்காதவர்களும் இருப்பார்கள் அவர்களை பற்றி கவலைப்படாமல் நம்ம வேலையை செம்மையா செய்துட்டு அந்த நதிமாதிரி போய்டே இருக்க வேண்டும். அதாவது உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா... வாழ்க்கை ஜம்முனு இருக்கும்!

பீஸ்ட் குட்டி கதை:

காற்று எப்படிலாம் பயன்படுதுன்னு ஒரு குட்டி கதை. ஒரு நாள், புட்பால் புல்லாங்குழலைப் பார்த்து, “இங்க பாரு எனக்குள்ளயும் காத்துதான் இருக்கு, உனக்குள்ளயும் காத்துதான் இருக்கு. ஆனா உன்னை உதட்டுல வச்சு முத்தம் கொடுக்கிறாங்க, என்னைத் தூக்கிபோட்டு மிதிக்கிறாங்க, ஏன்?” அப்படின்னு கேட்டுச்சாம்.

image

அதுக்கு புல்லாங்குழல் சொல்லுச்சாம், ‘ரொம்ப சிம்பிள். நீ வாங்குற காற்றை எல்லாம் நீயே வச்சுக்கிற. யாருக்கும் கொடுக்க மாட்டேங்கிற, அதனால உதை வாங்குற. ஆனா நான், எனக்குள்ள வர்ற காற்றை இசையா மாத்தி மத்தவங்களுக்கு கொடுக்கறேன். மத்தவங்களுக்கு கொடுக்கிறவங்க முத்தமிடப்படுவாங்க. உதவாம சுயநலமா இருந்தா உன்னை மாதிரி மிதிதான் வாங்குவாங்க. அதனால இனிமேலாவது நாலு பேருக்கு பயன்படு, சரியா?”ன்னு போயிடுச்சாம் புல்லாங்குழல். அதனால புட்பாலை விட புல்லாங்குழலா இருக்க, நாம ட்ரை பண்ணலாம்.

கதை நீதி: சுயநலமாக இருந்தா, கஷ்டம்தான் வரும்

வாரிசு குட்டி கதை:

image

ஒரு குடும்பத்தில் அண்ணன் தங்கை இருந்தாங்களாம். அவங்க ரெண்டுபேருக்கும் அவங்க பெற்றோர், தினமும் சாக்லேட் கொடுப்பாங்க. அதுல அந்த அண்ணன், தன்னுடைய சாக்லேட்டை பள்ளிக்கு எடுத்து செல்ல ஒரு இடத்தில் மறைத்து வைப்பார். அதை தங்கை எடுத்து சாப்பிட்டு விடுவார். தொடர்ந்து இது நடந்துகொண்டே இருந்திருக்கு. ஒரு நாள் அந்த தங்கச்சி பாப்பா, அண்ணன பார்த்து `அன்பு அன்பு னு சொல்றாங்களே... அப்படினா என்ன அண்ணா’னு கேட்குது. அதுக்கு அந்த அண்ணன் சொல்றாரு, “நீ உன்னோட சாக்லேட்டையும் சாப்பிடுற, நான் மறைச்சி வச்சிருந்த என்னோட சாக்லேட்டையும் எடுத்து சாப்பிடுற, ஆனா நீ சாப்பிடுறனு தெரிஞ்சும் அண்ணன் திரும்ப திரும்ப அதே இடத்துலையே மறைச்சி வைக்குறன் பாரு, அது தான் மா அன்பு”னு சொன்னாரு.

கதை நீதி: அன்புதான் எல்லாமே! அன்பு செய்ங்க பாஸ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்