Published : 06,Dec 2022 07:13 AM
”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீர்கள்”.. மாண்டஸ் புயல் எச்சரிக்கை; 6 மாவட்டங்களில் மீட்பு படை!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதன் எதிரொலியாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ள நிலையில் இன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.
கடலுக்கு செல்லாத புதுவை மீனவர்கள்
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 5,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதி புயலாக மாறும் என்ற அறிவிப்பும் புதுச்சேரியை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து தலைமை செயலாளர் ராஜுவ் வர்மா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து அரசுத்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கிராமம் கிராமமாக ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கை
அதேபோல், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் கடலுக்கு சென்று இருந்த மீனவர்களும் உடனடியாக கரைத்திரும்ப வேண்டும் எனவும் கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு கிராமம் கிராமமாக சென்று ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பை மீன்வளத்துறை செய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 49 மீனவ கிராமங்கள் உள்ளது. தற்போது மாண்டோஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவே மீனவர்கள் பாதுகாப்பாக தங்கள் படகுகளை வைக்க வேண்டும் எனவும் மீன்வளத்துறை மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்!
தென்மேற்கு அந்தமான் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு குழு சேர்ந்த வீரர்கள் விரைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட மீட்பு குழு வீரர்கள் வாகனங்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.
தவற விடாதீர்: வங்கக்கடலில் உருவாகிறது புயல் - டிச. 7 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு