“ரோஹித் வெமுலா தலித்தே அல்ல” - வழக்கை முடித்துவைத்த தெலங்கானா காவல்துறை! தொடங்கியது போராட்டம்!

ரோஹித் வெமுலா தலித்தே அல்ல என தெரிவித்துள்ள தெலங்கானா காவல்துறை வழக்கின் முடிவு அறிக்கையை தெலங்கான உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ரோஹித் வெமுலா
ரோஹித் வெமுலாpt web

ரோஹித் வெமுலா

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற பிஹெச்டி மாணவர் ரோஹித் வெமூலா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது வழக்கில் தொடர் விசாரணை நடந்து வந்தது. அவரது மரணம் நாட்டையே உலுக்கிய நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நீதிபதி ஏ.கே. ரூபன்வால் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம், ரோஹித் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல என தெரிவித்தது.

ஆனாலும் தேசிய பட்டியலின சாதிகள் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா, இந்த அறிக்கை போலி மற்றும் கற்பனையானது என தெரிவித்திருந்தார். ரோஹித்தின் தந்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்; அவரது தாய் ராதிகா மாலா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். திருமணமான சில ஆண்டுகளில் கணவரிடம் இருந்து பிரிந்து ரோஹித்தை தனியாக வளர்த்தார் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவரா அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரா என்பதை மாவட்ட ஆட்சியர் தொடங்கி மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு வரை பலரும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தெலங்கானா காவல்துறை அந்த வழக்கை முடித்து தனது அறிக்கையை தெலங்கான உயர்நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 4 மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதேசமயத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் தெலங்கானாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் தலித்தே அல்ல - தெலங்கானா காவல்துறை

வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் ஆதாரம் இல்லை என கூறியுள்ள தெலங்கானா காவல்துறை, தனது அறிக்கையில் வெமுலா தலித் அல்ல என்றும், அவரது சாதிச் சான்றிதழ் கட்டமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. அறிக்கை பெரும்பாலும் அவரது சாதி தொடர்பாகவே விவரித்து வருகிறது என குற்றம்சாட்டுகின்றனர் வெமுலா தரப்பினர்.

“அவர் தான் பட்டியலின சாதி இல்லை என்பதையும் அவரது தாயார் அவருக்கு எஸ்சி சான்றிதழை பெற்றுள்ளார் என்பதையும் அறிந்துள்ளார். பல ஆண்டுகளாக தான் பெற்ற பட்டங்களை இழக்க நேரிடும் என்பதாலும், வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்ற பயத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். அவரது பெற்றோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வத்தேரா சாதியைச் சேர்ந்தவர். எனவே எஸ்சி/ எஸ்டி சட்டத்தின் விதிகள் அவரது வழக்கில் பொருந்தாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரது நடவடிக்கைகள், அவரது தற்கொலைக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்போதைய பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் ரோஹித் மற்றும் பிறருக்கு சாதி அடிப்படையில் பாகுபாடு ஏதும் காட்டவில்லை. அவர் தண்டனையை குறைத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முடிவில் அவர் கோபமாக இருந்திருந்தால், அவர் நிச்சயமாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார். அவர் அதை செய்யவில்லை. எனவே ரோஹித்தின் மரணத்திற்கு பல்கலைக்கழகத்தில் நிலவிய சூழல் காரணமல்ல என்பதை இது காட்டுகிறது” என தெரிவித்துள்ளது.

சாதியை காவல்துறையால் முடிவு செய்ய முடியுமா? - வெமுலா தரப்பு கேள்வி 

மேலும் ரோஹித் தனது கல்வியில் சிறந்த விளங்கியவராக இருந்தபோதும், அவர் தனது படிப்பைவிட மாணவர்களது அரசியல் பிரச்சனைகளில் அதிக ஈடுபாடுகாட்டியதாக தோன்றுவதாக என்று ரோஹித்தை குற்றம்சாட்டியுள்ளது.

வெமுலாவிற்கு மாணவர் விடுதி, பிற பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை; மாணவர் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த அறிக்கை, எதிர்ப்பு என்ற பெயரில் நிர்வாகத்தில் இடையூறு செய்வதை தடுப்பதாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றது என குற்றம்சாட்டுகின்றனர் வெமுலா தரப்பினர்.

ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா, “காவல்துறையினரின் கூற்றுகள் தவறாவது, ஒருவரின் சாதியை காவல்துறை அதிகாரிகளால் முடிவு செய்ய முடியாது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் உதவி கோருவோம். போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com