இது மனிதகுலத்திற்கான அபாய மணிதான்.! இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பநிலையும் அதன் விளைவுகளும்!

இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பநிலையும் அதன் விளைவுகளும்
வானிலை மாற்றம்
வானிலை மாற்றம்PT

செய்தியாளார் பாலவெற்றிவேல்

அதிதீவிர புயல், கணிக்க முடியாத வானிலை மாற்றங்களை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இச்சூழலில், இந்திய பெருங்கடலில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருவது, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாலைவன பூமியான சவுதி அரேபியாவை, கனமழை, வெள்ளம்
புரட்டிப் போட்டிருக்கிறது. திரும்பிய திசையெங்கும் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. துபாயில் கடந்த மாதத்தில் கொட்டித்தீர்த்த பெருமழையால், நகரமே ஸ்தம்பித்தது. ஒமானிலும் எப்போதும் ஏற்படாத மழை, வெள்ளம் இந்தாண்டு நிகழ்ந்துள்ளது. கென்யாவில் கனமழை
பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதீத
மாற்றங்கள் நமக்குச்சுட்டுவது ஒன்றுதான்.. இயற்கையின் சீற்றம்..

வானிலை மாற்றம்
“பக்கவிளைவையும் நன்மையையும் சேர்த்து புரிஞ்சுக்கணும்”-கோவிஷீல்டு தடுப்பூசிகுறித்து முதுநிலை விஞ்ஞானி

இந்திய பெருங்கடல் பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல. அதை மெய்பிக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது, இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை.
இந்திய பெருங்கடலின் வெப்பநிலை கணிசமான அளவிற்கு
அதிகரித்துள்ளதாக புனேவில் செயல்படும் இந்த நிறுவனம்
தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பேராசிரியர்கள் குழு நடத்திய பல்வேறு விதமான ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 1980-லிருந்து 2020ஆம் ஆண்டு வரை இந்தியப் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை 78.8 டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருந்து 82 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்
86 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிதீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக
கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்திய பெருங்கடலின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் அதீத வெப்பநிலை அடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமேற்கு பகுதி என்பது
அரபிக்கடலை ஒட்டி இருக்கும் அரேபிய தீபகற்பம், வடகிழக்கு பகுதி என்பது தென்னிந்தியாவை ஒட்டி இருக்கும் வங்காள விரிகுடா. இந்த பகுதிகளில் அதிகப்படியான கட்டுமானங்கள், கப்பல் போக்குவரத்து போன்றவற்றால், செயற்கையான வெப்பமாறுதல் ஏற்படுவதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

பெருங்கடல் வெப்ப அலை என்பது அதிதீவிரமான புயல்களை உருவாக்கும் என்றும்,  பருவமழையும் இதன் காரணமாக மாறலாம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சமீபகாலமாக பருவ மழைகளில் ஏற்படும் மாற்றத்திற்கு இந்திய
பெருங்கடலில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றமே முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் புயல், மழைக்கான எச்சரிக்கையை 66% கணிக்கும் நிலையில், பெருங்கடல் வெப்ப அலைகளால் வானிலை கணிப்பு, 55 சதவீதத்திற்கும் கீழ் குறையும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் வெப்ப அலையின் தாக்கம், கடலின் மேற்பரப்பில் மட்டும் இல்லாமல், நீருக்கடியில் 2 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் வரை அதன் தாக்கம் இருக்கும் என்று
கூறப்பட்டுள்ளது.  இதனால் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா பனிக்கட்டிகள் பெருமளவில் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேல் இந்திய
பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.  இதனால் பல வகையான மீன்கள் உட்பட கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவை பாதிப்படையும் எனவும் இந்திய வெப்ப மண்டல வானிலை
ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் வெப்பஅலையின் தாக்கம் மற்றும்அமிலத்தன்மை அதிகரித்து வருவது அபாய மணியை
ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த அபாய மணி, மனிதகுலத்திற்குமானதுதான்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com