Published : 25,Nov 2022 12:17 PM

`கௌரவ’த்திற்கு பெண் உயிரை கேட்கும் குடும்ப அமைப்புகள் - எப்போதுதான் மா(ற்)றப்போகிறோம்?

On-this-International-Day-for-the-Elimination-of-Violence--know-How-safe-are-our-homes-for-women

டெல்லியில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி, உ.பி.யில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட மனைவி, தமிழகத்தின் திருப்பூரில் ஷால் மூலம் கழுத்தை நெறித்து கணவனாலேயே கொலை செய்யப்பட்ட மனைவி…. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாவற்றிலும் இருக்கும் இரு ஒற்றுமைகள் – பெண்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; அதுவும் தனது நெருங்கிய உறவால். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை… ஐ.நா.வும் சொல்கிறது. ஆம் இணையராலும், கணவனாலும், குடும்பத்தினராலுமே பெண் இப்படி கொலைசெய்யப்படுவதென்பது, நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது என்கின்றது ஐ.நா. அந்தவகையில் பார்க்கையில் இன்றைய தேதிக்கு, வீடுதான் பெண்ணை வதை செய்யும் முக்கியமான இடமாக இருக்கிறதாம்.

இந்தியாவின் குடும்ப நல அமைப்பு, 18 – 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் 2019-21 காலகட்டத்தில் ஆய்வொன்றை நடட்தியிருந்தது. அதன்முடிவில், அவர்களுக்கு கிடைத்த முக்கிய தரவுகள்:

 • 30% இந்திய பெண்கள், தங்கள் வாழ்நாளில் உடல் மீதான வன்முறை – பாலியல் துன்புறுத்தல் – உணர்வு ரீதியான வன்முறைக்கு உள்ளாகியிருக்கின்றனர் 
 • 40% இந்திய பெண்கள், அனைத்து வகை அப்யூஸ்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்
 • 25% இந்திய பெண்கள், உடல்ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

 • 6% இந்திய பெண்கள், உடல்ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • 1% இந்திய பெண்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • 4-ல் ஒரு பெண் மட்டுமே, தன் உடல் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறையை வெளியில் சொல்கிறார்.
 • பெண் உடல் மேல் நிகழ்த்தப்படும் வன்முறையில், 7% பேருக்கு கண்ணில் காயம், சுளுக்கு, தீக்காயம் போன்றவை ஏற்பட்டுள்ளது
 • 6% பேருக்கு மோசமான காயம், எலும்பு முறிவு, பல் உடைதல் போன்றவை நிகழ்ந்துள்ளது

image

மேற்சொன்ன தகவல்கள் மட்டுமல்ல. இன்னொரு தரவையும் உங்களுக்கு சொல்கிறோம். ஐ.நா தரப்பிலும் `குடும்பத்தினரால் அவரவர் வீட்டு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்’ பற்றிய சில அதிர்வூட்டும் தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை: 

 • 2021-ல் குடும்பத்தினராலும் நெருங்கிய உறவிலுள்ளவராலும் படுகொலை செய்யப்பட்ட பெண்கள், சிறுமிகள் - 45,300
 • 2021-ல் ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் குடும்பத்தினர் / இணையரால் 5-ல் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்
 • கண்டம் வாரியக கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை

ஆசியா – 17,800

ஆப்ரிக்கா – 17,200

ஐரோப்பா – 2,500

அமெரிக்கா – 7,500

image

 • இதில் பலரும் கொலை செய்யப்பட காரணங்களாக இருந்தவை: பாலியல் வன்கொடுமைக்கு பின்னான மரணம் – ஆணவக்கொலை – வரதட்சனை கொடுமையால் கொலை – பேய் பிடித்ததாக சொல்லி கொலை – பெண் என்பதால் கொலை. இப்படி இன்னும்கூட நிறைய காரணங்கள் உள்ளன. 2021-ல், குடும்பத்தினர் என்ற வகையின் கீழ் மட்டுமன்றி, மொத்தமாக திட்டமிட்டு கொல்லப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை, சுமார் 81,000.
 • ஐ.நா.வின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ அளித்திருக்கும் தகவல்களின்படி, ஒவ்வொரு 11 நிமிடத்துக்கு, இந்த உலகில் ஒரு பெண் தன் சொந்த இணையரால் கொல்லப்படுகிறார்.

உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மூன்றில் ஒரு பெண் உலகளவில் தன் நெருங்கிய உறவினரால் (பெரும்பாலும் இணையரால்) உடல் ரீதியான மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். மேலும் நான்கில் ஒரு வளரிளம் பருவ பெண் (15 - 19 வயது பெண், பாலியல் உறவுக்கொள்கையில் உடல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்.  

இப்படி தன் குடும்பத்தாலேயே பெண் கொல்லப்படுவதை பொறுத்தவை, அவை பெரும்பாலும் உடல்ரீதியான வன்முறைகளாகவும், பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் வன்முறைகளாகவும், உணர்வு ரீதியான அல்லது மனரீதியான சிக்கலை ஏற்படும் வன்முறைகளாகவும் தான் உள்ளன. இணையரால் நிகழும் கொடுமையில் மிகமுக்கியமானதாக இருப்பது, பின்தொடர்தல். 2020-ல், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட ஒரு தகவலின்படி, மூன்றில் ஒருவர் இதுபோன்ற வன்முறைகளால் குடும்பத்தில் பாதிக்கப்படுகின்றனராம்.

image

2022-ல் லேன்செட் ஆய்வொன்றில், மிக நெருங்கிய இணையரால் நிகழும் வன்முறையில், ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர் மன ரீதியிலான குறைபாடுகளால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 

பெண்களுக்கு பாதுகாப்பற்ற சமூகத்தையும் வீட்டையும் உருவாக்கி வைத்துள்ள நாம், எப்போது அதை சீரமைக்கப்போகிறோம்? இதற்கான விடையே, இந்நாளின் நோக்கம். ஆம். பெண்ணுக்கு நிகழும் வன்முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை எதிர்க்கவும் தான் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் (நவம்பர் 25) `சர்வதேச அளவில் பெண் மீதான வன்முறை ஒழிப்பு தினம்’ பட்டியலிடப்படுகிறது.

தொடங்குவோம் மாற்றத்தை, நம்மிடமிருந்து.

image

நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய மாற்றங்கள்:

*  இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பக்கம் நின்று, அவர்களுக்காக நியாயம் கேட்பது மற்றும் மீட்பது.

* பாதிக்கப்பட்டோரை குற்றப்படுத்தாமல், அவர்களுக்காக நிற்பது.

* பெண் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு நாட்டு அரசும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்