Published : 25,Nov 2022 07:32 AM

``விஜய்க்கு அங்கு அவ்ளோதான் மரியாதை... தமிழ் நடிகர்கள் செய்யும் தவறே இதான்” - கே.ராஜன்

Producer-K-Rajan-speaks-about-issues-in-Vijay-s-Vairsu

தயாரிப்பாளர் கே.ராஜன், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆந்திராவில் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதில் நிகழும் பாகுபாடு குறித்து பேசினார். அவர் பேசியவற்றின் முழு விவரம், இங்கே:

“தமிழகத்தில் அஜித்தின் துணிவு படத்துக்குதான் நிறைய திரையரங்கு ஒதுக்கப்படுகிறது என்பதெலாம் பொய். விஜய்யின் வாரிசுக்கு 50% திரையரங்கு, அஜித்தின் துணிவு படத்துக்கு 50 % திரையரங்கு என்றுதான் தமிழகத்தில் ஒதுக்கப்படும். விஜய்க்கு தியேட்டர் பிரச்னை, ஆந்திராவில் தான் இருக்கிறது. ஆந்திர உரிமையாளர்களை இந்த விஷயத்தில் நாம் குறை சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய தொழிலாளர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதுதான் சரியும்கூட. நம் தொழிலாளர்களை காக்க வேண்டிய கடமை நமக்குதான் உள்ளது. நாம், இங்குதான் எல்லா போட்டியையும் போட வேண்டும்.

 image

விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் வெளியானபோது, கன்னடாவிலிருந்து கேஜிஎஃப் கூட இங்கு ரிலீஸ் ஆனது. அதற்கு நாம் எவ்வளவு தியேட்டர் தந்தோம்? கேஜிஎஃப்-க்கு அப்படியே பாதிப்பாதி தியேட்டர் கொடுத்துவிட்டோமா நாம்? அப்படியிருக்க, இப்போது மட்டும் எப்படி நமக்கு பாதி தியேட்டர் கிடைக்க வேண்டுமென்று ஆந்திராவில் எதிர்பார்க்க முடியும்?

அங்கு அவர்களுக்கு பாலகிருஷ்ணா படம் ரிலீஸாகிறது. அதனால் அதற்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள். விஜய்க்கு அங்கு அவ்வளவுதான் மரியாதை. இதில் இன்னொரு விஷயம், வாரிசு படம் தெலுங்கில் நேரடியாக எடுக்கப்படவில்லை. டப்பிங் படமாகத்தான் போகிறது. அதனால் அவர்கள் டப்பிங் படத்துக்கு தரும் தியேட்டர் அளவுகோலில்தான் இப்போதும் செயல்படுவார்கள்.

image

தமிழ் நடிகர்கள், தமிழ் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க வேண்டும். அப்படி இல்லாமல், கூடுதலாக சில கோடிகள் கிடைக்கிறதென்று, தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு நடிக்கிறார்கள். வாரிசும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. இப்போது ஒரே படத்தில் விஜய்க்கு ரூ.25 கோடி கூடுதல் சம்பளம் கிடைத்திருக்கும். அதனால் அவர் தன்னுடைய சம்பள அளவுகோலை உயர்த்தியிருப்பார்.

இதேபோல தான் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனும் செய்தார். சிவகார்த்திகேயன், நல்ல தம்பி… அவர்மேல் எனக்கு எந்தக்குறையும் இல்லைதான். ஆனால் அவர் இப்படி தெலுங்கு தயாரிப்பாளரிடம் நடித்துக்கொடுத்தால், அடுத்து அவரை புக் செய்யும் தயாரிப்பாளருக்கு, கூடுதல் சுமைதானே? விஜய்க்கும் இது பொருந்தும்.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்படி செய்து செய்தே, இங்குள்ள தயாரிப்பாளர்களின் சிக்கலை உயர்த்திவிடுகின்றனர். தெலுங்கு நடிகர்களேவும், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார்கள் என்பதால், அவர்களை வைத்தே படங்களை தயாரிக்கவும். தமிழ் தொழிலாளர்களுக்காக, தமிழுக்காக தமிழ் நடிகர்கள் படங்கள் நடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வாரிசு சர்ச்சையில் இதுவரை நடந்தது என்ன?

விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வரசுடு’ என்றப் பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வாரிசு’ திரைப்படம்  பொங்கல் பண்டிகையின்போது அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

image

இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசினர். தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவில்லை என்றால், ‘வாரிசு’க்குப் பின், ‘வாரிசு’க்கு முன் என்ற நிலை உண்டாகும் என்று காட்டம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, "பண்டிகை நாட்களில் தமிழ் படங்களை தெலுங்கில் வெளியிடக் கூடாது என்று அங்கு ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அவர்களிடம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பதை திரும்பப் பெற வேண்டும். மொழி எல்லைகளைக் கடந்த ஒரு கலை தான் சினிமா. இதனை ஒரு மாநிலத்திற்கானது எனக் கருதி மொழிப் பிரச்சனையாக பிரித்திட வேண்டாம் என அவர்களுக்கு நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

image

இந்தச் சிக்கல் தொடர்பாக நாங்கள் விரிவாகப் பேசியுள்ளோம். இது சம்பந்தமாக அவர்கள் கூறியதைத் திரும்பப் பெறுவதாகசொல்லியிருக்கிறார்கள். அத்துடன் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். எங்களையும் இது போன்று தீர்மானத்தை எடுக்க வைத்துவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்ப முடிவெடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

அவர்கள் எங்களிடம் பேசியதை வைத்து பார்க்கையில் ‘வாரிசு’ படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது. தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து சிக்கல் இல்லாமல் ரிலீசாகும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். சங்கராந்தி அன்று சிரஞ்சீவி, பாலய்யா படங்கள் ரிலீசாக இருக்கிறது. நமது ஊரில் பண்டிகை தினத்தில் திரையரங்குகளில் நமது கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுமாதிரி தான் அங்கேயும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்னவிதம் தவறு. அதையும் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்