Published : 16,Nov 2022 01:43 PM

தடுமாறும் பிரான்ஸ் அணி தலை நிமிருமா? கிலியன் எம்பாப்பே-வின் அதிரடி ஆட்டம் தொடருமா?

Will-the-faltering-French-team-recover-Will-Kylian-Mbappes-streak-continue

பிரான்ஸ் - உலகக் கோப்பை வரலாற்றின் சமீபத்திய சாபத்தை உடைக்க காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த 5 உலகக் கோப்பைகளில் நடப்பு சாம்பியன்களாகக் கலந்துகொண்ட 4 ஐரோப்பிய அணிகள் முதல் சுற்றோடு நடையைக் கட்டியிருக்கின்றன.

2002ல் பிரான்ஸ், 2010ல் இத்தாலி, 2014ல், 2018ல் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறின. இந்நிலையில் அந்த சாபத்தை உடைக்க தயாரிகிக்கொண்டிருக்கிறது பிரான்ஸ். இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்?

பயிற்சியாளர்: டிடியர் டெஷாம்ஸ்
FIFA ரேங்கிங்: 4
2022 உலகக் கோப்பை பிரிவு: D
பிரிவில் இருக்கும் அணிகள்: டென்மார்க், ஆஸ்திரேலியா, துனிசியா

image

உலகக் கோப்பையில் இதுவரை: 

இது பிரான்ஸ் அணியின் 16வது உலகக் கோப்பை. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றிருக்கிறது அந்த அணி. ஒரு முறை இரண்டாவது இடமும், இரண்டு முறை மூன்றாவது இடமும் பிடித்திருக்கிறது. 1998 இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்திய அந்த அணி, கடந்த உலகக் கோப்பை பைனலில் குரோஷியாவை வீழ்த்தியது. 2006 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் ஷூட் அவுட்டில் தோற்றது அந்த அணி. அந்தப் போட்டியில் இத்தாலி வீரர் மார்கோ மடரசியை தலையால் முட்டித்தள்ளி ஜிடேன் ரெட் கார்ட் வாங்கிய சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது!

தகுதிச் சுற்று செயல்பாடு:

2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்று பிரான்ஸுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது என்று சொல்ல முடியாது. உக்ரைன், பின்லாந்து, போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா, கஜகஸ்தான் அணிகள் அடங்கிய எளிதான பிரிவில் கூட 3 போட்டிகளை டிரா செய்தது அந்த அணி. இருந்தாலும் 18 புள்ளிகளுடன் அந்தப் பிரிவில் முதலிடம் பிடித்தது. 8 போட்டிகளில் 18 கோல்கள் அடித்த அந்த அணி, 3 கோல்கள் மட்டுமே விட்டது. ஆன்டுவான் கிரீஸ்மேன் 6 கோல்களும், கிலியன் எம்பாப்பே 5 கோல்களும் அடித்தனர்.

image

பயிற்சியாளர்:

உலகின் மிகச் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவரான டிடியர் டெஷாம்ஸ் பத்தாவது ஆண்டாக பிரான்ஸ் பயிற்சியாளராகத் தொடர்கிறார். நல்ல முன்னேற்றம் கண்டிருந்த அணி, சமீப காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. யூரோ 2020 தொடரில் விரைவிலேயே வெளியேறிய அந்த அணி, UEFA நேஷன்ஸ் லீக் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றது. எப்போதும் தன் திட்டத்தில் தீர்க்கமாக இருக்கும் டெஷாம்ஸ், இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஃபார்மேஷன்களை, பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டார். அது அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இருந்தாலும், தன் வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாட்டை வாங்கக்கூடிய ஒரு பயிற்சியாளர் என்பதால், இன்னும் அவர் மீது பிரான்ஸ் நிர்வாகமும், ரசிகர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பலம்:

பிரான்ஸ் அணியின் அட்டாக் உலகத்தர வீரர்களால் நிரம்பியிருக்கிறது. கிலியன் எம்பாப்பே, கரீம் பென்சிமா, ஒலிவியர் ஜிரூட், ஆன்டுவான் கிரீஸ்மேன், ஓஸ்மான் டெம்பளே என பல நூறு மில்லியன் டாலர் வீரர்கள் இந்த அணியில் இருக்கிறார்கள். அதனால், நிச்சயம் அந்த அணிக்கு கோல்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் டிஃபன்ஸும் ஓரளவு பலமாகவே இருக்கிறது. அந்த அணியின் டிஃபண்டர்கள் சிலர் சென்டர் பேக், ஃபுல் பேக் போன்ற இரண்டு பொசிஷன்களிலுமே ஆடுவார்கள் என்பது அவர்கள் வேறு வேறு ஃபார்மேஷனுக்கு போட்டியின் நடுவிலேயே மாற உதவும்.

image

பலவீனம்:

அந்த அணியின் நடுகளம் இரண்டு பெரும் தலைகளை தவறவிட்டிருக்கிறது. 2018 உலகக் கோப்பை வெல்வதில் மிகமுக்கிய அங்கம் வகித்த என்கோலோ கான்டே, பால் போக்பா இருவரும் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பெறவில்லை. இரு பெரும் அனுபவ வீரர்கள் இல்லாததால், ராபியோ, கமவிங்கா, சுவாமேனி ஆகியோர் தான் அந்த அணியின் நடுகளத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மிகப் பெரிய அணிகளில் இவர்கள் ஆடிவந்தாலும், உலகக் கோப்பையில் எந்த அளவுக்கு அவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பது தெரியவில்லை.

நம்பிக்கை நாயகன்:

கடந்த உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரர் வென்ற கிலியன் எம்பாப்பே இம்முறை இன்னும் சிறப்பான செயல்பாடு கொடுக்க காத்திருப்பார். இந்த 4 ஆண்டுகளில் இன்னும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார். தொடரின் தொடக்கத்தில் பென்சிமா ஆடுவது சந்தேகம் என்பதாலும், கிரீஸ்மேன் முன்பைப் போல நல்ல ஃபார்மில் இல்லை என்பதாலும் அதிக பொறுப்பு எம்பாப்பேவின் மீது விழும்.

image

வாய்ப்பு:

உலகக் கோப்பையை இந்த அணி மீண்டும் வெல்லுமா என்றால், வாய்ப்புகள் குறைவு தான். உலகக் கோப்பையை வெல்லும் அணிகள் எப்போதும் மிகச் சிறந்த நடுகளம் கொண்ட அணிகளாகவே இருக்கும். வழக்கமான உலகக் கோப்பை சாபம் நிச்சயம் பிரான்ஸை பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. முதல் போட்டியில் கொஞ்சம் சொதப்பினாலும் எல்லாம் மாறிவிடும். குரூப் பிரிவை தாண்டிவிட்டால், காலிறுதிக்கு முன்னேறலாம். பிரான்ஸைப் பொறுத்தவரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது!

ஸ்குவாடு:

ஹூகோ லோரிஸ், அல்ஃபோன்ஸா அரியோலா, ஸ்டீவன் மண்டண்டா, பெஞ்சமின் பவார்ட், ஜூல்ஸ் கூண்டே, பிரெஸ்னல் கிம்பெம்பே, ரஃபேல் வரேன், வில்லியம் சலிபா, லூகாஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர்னாண்டஸ், டயோட் உபமகானோ, இப்ராஹிமா கொனாடே, ஆட்ரியன் ராபியோ, எடுவார்டோ கமவிங்கா, ஆரிலியன் சுவாமெனி, ஜோர்டான் வெரடௌட், யூசுஃப் ஃபொஃபானா, மாடியோ குண்டூசி, கிங்ஸ்லி கோமன், கிலியன் எம்பாப்பே, ஆன்டுவான் கிரீஸ்மேன், ஓஸ்மான் டெம்பளே, கரிம் பென்சீமா, கிரிஸ்டோஃபர் என்குன்கு, ஒலிவியர் ஜிரூட்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்