Published : 16,Nov 2022 07:47 AM

ட்விட்டர், மெட்டா வரிசையில் அமேசானும் ஆட்குறைப்பு - டெக் நிறுவனங்களுக்கு என்ன ஆச்சு?

After-Meta-Twitter-Amazon-to-sack-10000-employees-What-is-causing-the-firing-wave-in-tech-market

தொழில்நுட்ப துறையில் சமீபத்திய வாரங்களாகவே பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. டெக் நிறுவனங்களுக்கு ஏன் இந்த நிலை?

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களைப் போல் உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான் நிறுவனமும் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. செலவுகளை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ட்விட்டர், மெட்டா நிறுவனங்கள் வரிசையில் அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளது. இது விசாவில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றுவோர் குறிப்பிட்ட நாட்கள் வேலை இல்லாமல் இருந்தால் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

image

கடந்த சில வாரங்களாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது. ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஒட்டுமொத்த ஊழியர்களில் 13 சதவீதம் அதாவது 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்நாப்சேட், பைஜூஸ், வேதாந்து, உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. தொழில்நுட்ப துறையில் சமீபத்திய வாரங்களாகவே பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. ஐடி துறையில் மட்டும் அல்ல, ஸ்டார்ட் அப் துறைகளிலும் பணி நீக்கம் இருந்து வருகின்றது. தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்தியும், பணிநீக்கம் செய்து வரும் காரணத்தால் புதிய வேலை பெறுவதில் பெறுவது பெரும் சவாலாக மாறியுள்ளது. சரி, டெக் நிறுவனங்களுக்கு ஏன் இந்த நிலை?

image

உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பல நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதுமட்டும் அல்ல, புதிய பணியமர்த்தலையும் முடக்கியுள்ளன. இது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணைய பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, போட்டி அதிகரிப்பு மற்றும் விளம்பரங்கள் மூலமான வருவாய் இழப்பு ஆகியவை எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயே கிடைத்துள்ளன. கொரோனா காலத்தில் ஐடி துறையில் அதிகப்படியான டிமாண்ட் உருவானதால் ஊழியர்களை அவசர அவசரமாக சேர்க்கும் நிலை ஐடி நிறுவனங்களுக்கு உருவானது, இதன் விளைவு தான் தற்போது டெக் நிறுவனங்களுக்கு  உருவான பிரச்சனை. எனவே, செலவுகளைக் குறைப்பதற்காக லே ஆஃப் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

image

அமேசான் நிறுவனத்தை பொறுத்தவரையில் பண்டிகை மற்றும் விடுமுறைக் கால விற்பனையை இலக்காகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த விடுமுறை காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் ஈட்டவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளிலும் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. மேலும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு மக்கள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குச் சென்று பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனால் அமேசான் வியாபாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து புதிய கிடங்குகளை திறப்பதையும், சில்லறை விற்பனை குழுவில் பணியமர்த்துவதை தாமதப்படுத்துவதையும் அமேசான் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

image

யூடியூப், டிக்டாக் போன்ற முன்னணி நிறுவனங்களின் போட்டி காரணமாகப் ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களை இழக்கத் துவங்கியுள்ளது. இதுவும் கடந்த 18 வருடத்தில் முதல்முறையாக நடக்கும் ஒரு விஷயமாகும். நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் 18 ஆண்டுகளுக்கு தொடர் வளர்ச்சியை பார்த்து வந்ததாகவும், ஆனால் முதல்முறையாக தற்போது வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்திருப்பதாகவும் மெட்டா  தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: ”எனக்கு தெரியும் இது கடினமான நேரம் என்று”-ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மார்க் சொல்வதென்ன?.


சற்று முன்எடிட்டர் சாய்ஸ்