Published : 09,Nov 2022 05:05 PM
நியூசிலாந்தை வீழ்த்தி கெத்தாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம், ரிஸ்வான் அசத்தலான பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49 ரன்களை எட்டுவதற்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், கேப்டன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து அணி 16.2 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அசத்தலாக பந்துவீசினர். அதனால், டெத் ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட விளாசப்படவில்லை. ஏன் பவுண்டரிகள் கூட அதிகம் இல்லை. அதனால், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடியது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பாபர் அசாம், ரிஸ்வான் நிதானமாவும், வாய்ப்பு கிடைக்கும் போது பவுண்டரிகளை விளாசியும் விளையாடினர். இந்த உலகக் கோப்பையில் இந்த ஜோடி பெரிதாக அடிக்கவில்லை. ஆனால், முக்கியமான இந்தப் போட்டியில் அட்டகாசமாக விளையாடினர். பாபர் அசாம் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு தான் முதல் விக்கெட்டை இழந்தது. பாபர் அசாம் 53 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஸ்வான் அரைசதம் விளாசி கடைசி நேரத்தில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் முஹமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், முதல் அணியாக பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த நியூசிலாந்து அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது.
நாளைய போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.
13 ஆண்டுகளில்..
பாகிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 13 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 2007 முதல் டி20 உலகக் கோப்பை விளையாடப்பட்டு வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி 2007 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்றது. அதேபோல், 2009 ஆம் ஆண்டு கோப்பையையும் தட்டியது.